×

76 சி.பி.ஆர்.எப் படையினர் கொல்லப்பட்ட வழக்கில் மாவோயிஸ்ட் தீபக் முக்கிய குற்றவாளி : கோவையில் சட்டீஸ்கர் போலீசார் விசாரணை

கோவை : கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக், கடந்த 2010ம் ஆண்டு சட்டீஸ்கரில் 76 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த 28ம்  தேதி கேரள தண்டர் போல்ட்  போலீசார் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 4 மாவோயிஸ்ட்கள்  சுட்டு  கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூட்டின்போது தப்பியோடிய சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக்கை கோவை மாவட்டம் செம்புக்கரை பெருமாள்முடி வனப்பகுதியில் தமிழக சிறப்பு அதிரடி படையினர் கடந்த 9ம் தேதி கைது செய்தனர். இவர் மீது தேச துரோக செயல்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீபக்கின் இடது காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீபக் மீது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர் மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா மாவட்டம் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள சிந்தால்நார் கிராமத்தில் 2010ல் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது மாவோயிஸ்ட்கள் பெரிய அளவிலான கன்னிவெடி மற்றும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 76 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் தீவிர ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். பலர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். விசாரணையில் தாக்குதலில் தொடர்புடைய மாவோயிஸ்ட்கள் குறித்த தகவல்கள் கிடைத்தது. அந்த தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர் தீபக் என்பதால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சட்டீஸ்கர் போலீசார் தேடி வந்தனர். அதேபோல அவர் மீது சுக்மா மாவட்ட போலீசாரை தாக்கியது, ஆயுதங்கள் வைத்திருந்தது உள்பட 3 வழக்குகள் நிலுவையில் இருந்தது. இதனால் அங்கிருந்து தப்பிய தீபக் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களிலுள்ள மாவோயிஸ்ட் குழுக்களிடம் தஞ்சம் புகுந்ததுள்ளார். மாவோயிஸ்ட் கொரில்லா படையில் உறுப்பினரான இவர், ஆயுத பயிற்சி அளிப்பதில் திறமைசாலி என்பதால் இங்குள்ள மற்ற மாவோயிஸ்ட்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கோவையில் தீபக் சிக்கியிருக்கும் தகவல் சட்டீஸ்கர் மாநில போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டீஸ்கர் மாநிலம் குந்தாசுக்மா மாவட்ட டி.எஸ்பி. மனோஜ்குமார் தலைமையிலான  போலீசார் நேற்று முன்தினம் கோவை வந்தனர்.  அவர்கள் தீபக்கை சட்டீஸ்கர்  அழைத்து சென்று விசாரிப்பதற்காக சுக்மா நீதிமன்றம் வழங்கிய வாரண்டை கொண்டு  வந்திருந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும்  தீபக்கிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தீபக்கை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு  அனுமதி கேட்டு கோவை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வந்தனர். ஆவணங்கள் இந்தியில் இருந்ததால்,  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்து மீண்டும்  தாக்கல் செய்யுமாறு நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்கள்  திரும்பி சென்றனர். அநேகமாக தீபக்கை  காவலில் எடுத்த விசாரிக்க சட்டீஸ்கர் போலீசார் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

வழக்கு ஒத்திவைப்பு


மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க தடாகம் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தீபக் தரப்பில் ஆஜராக அனுமதிக்குமாறு தமிழ்நாடு குடியுரிமை பாதுகாப்பு நடுவம் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியபாலன் மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று நடக்கிறது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது?


மாவோயிஸ்ட் தீபக் மீது நான்கு மாநிலங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. தடாகம் போலீசார் தீபக் மீது தேச துரோக செயல்கள் தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட நடைமுறைகள் காரணமாக விசாரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் அவரிடம் முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஏதுவாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரியவருகிறது.

Tags : soldiers ,CPRF ,killing ,police investigation ,Chhattisgarh ,Maoist Deepak , Maoist Deepak guilty, killing 76 CPRF soldiers
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை