மேலவளவு கொலை வழக்கு ஆயுள்தண்டனை பெற்ற 13 கைதிகள் விடுதலையில் உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி

* ஒவ்வொரு மனித உயிரும் முக்கியமானது என நீதிபதிகள் கருத்து

மதுரை : மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், அதிருப்தியை வெளிப்படுத்திய ஐகோர்ட் கிளை, ஒவ்வொரு மனித உயிரும் முக்கியமானது எனக் கூறியுள்ளது. எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். இதில், மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன் உட்பட 13 பேர் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலையை எதிர்த்து வக்கீல் ரத்தினம் என்பவர், ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். அதில், 13 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் அரசாணையை தனக்கு வழங்க வேண்டுமென கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது எனக்கூறி ஏற்கனவே ஒரு மனு செய்யப்பட்டிருந்தது. அப்போது அரசுத் தரப்பில் எந்த முடிவுக்கும் வரவில்லையென கூறப்பட்டுள்ளது. இதனால், மனுதாரர் தரப்பு கோரிக்கையை பரிசீலிக்குமாறு உத்தரவாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தண்டனையை, தமிழக அரசு எளிதாக கையாண்டு 13 பேரை விடுவித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது. பயங்கரமாக, கொடூரமாக சம்பவம் நடந்துள்ளது. அதை சுலபமாக கையாண்டுள்ளனர். விடுதலை செய்த அரசாணையை பெறவே மனுதாரர் பெரும் சிரமப்படுகிறார். அப்படி என்றால் சம்பந்தப்பட்ட மக்களை பாதுகாப்பது எப்படி? முன்கூட்டியே விடுவிக்குமளவுக்கு இவர்கள் சமூகத்திற்கு முக்கியமானவர்களா?. ஜாதியத்தை முன்னிறுத்தக் கூடாது. ஒவ்ெவாரு மனித உயிரும் முக்கியமானதே. இப்படித்தான், தர்மபுரியில் மாணவிகள் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர் என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர், 13 பேர் விடுவிக்கப்பட்டதற்கான அரசாணை மற்றும் அனைத்து ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட அதிகாரி, நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: