×

நாடாளுமன்ற துளிகள்...

ஆல் இஸ் நாட் வெல் வெங்கையா வேதனை

இந்திய அரசியலில் மாநிலங்களவையின் பங்கு என்ற தலைப்பிலான விவாதத்தில் பேசிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கையாநாயுடு, ‘‘கடந்த 67 ஆண்டுகால பயணத்தில், நாட்டின் சமூக பொருளாதார மாற்றத்தில், மாநிலங்களவை முக்கிய பங்காற்றியுள்ளது. ஆனாலும், எதுவும் சரியில்லை. இந்த அவையின் கவுரவத்துக்கு தகுந்தபடி நமது செயல்பாடுகள் இருக்கிறதா என உறுப்பினர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். காற்று மாசு பிரச்னை குறித்து விவாதிக்க நகர்ப்புற விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு கூட்டத்துக்கு சமீபத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 29 உறுப்பினர்களில், 25 உறுப்பினர்கள் வரவில்லை. எம்.பி.க்கள் நாடாளுமன்ற விதிமுறைகளை பின்பற்றி, விவாதங்களில் பங்கெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

சைக்கிள், இ-காரில் வந்த எம்பி.க்கள்

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து 2வது நாளாக நேற்று மோசமான நிலையில் இருந்தது. காற்று மாசு அளவு அதிகரித்து வருவதால், நேற்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு பாஜ எம்பி.க்கள் மன்சுக் மாண்டவியா, மனோஜ் திவாரி ஆகியோர் முகமூடி அணிந்து சைக்கிளில் வந்தனர். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எலக்ட்ரிக் காரில் வந்திருந்தார். காங்கிரஸ் எம்பி. கவுரவ் கோகாய் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் முகமூடி அணிந்து காற்று மாசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

144 தடை உத்தரவு

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) மாணவர் விடுதி கட்டணம் 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையடுத்து, ஜேஎன்யூ மாணவர் அமைப்புகள் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்துக்கு பேரணியாக சென்று எம்பி.க்களிடம் முறையிட முடிவு செய்தனர். அவர்களை தடுத்து நிறுத்த நாடாளுமன்ற வளாக பகுதியில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியேயும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

உயர்தர விவாதம் வேண்டும்

குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த பிரதமர் மோடி கூறியதாவது: குளிர்கால கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். உயர்தரமான விவாதத்தில் எம்.பி.க்கள் ஈடுபட வேண்டும். அனைத்து விஷயங்கள் பற்றியும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. மாநிலங்களவைக்கு இது 250வது கூட்டம். வரும் 26ம் தேதி நாம் அரசியல்சாசன தினம் கொண்டாடுகிறோம்.

நமது அரசியல் சாசனம் 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நாட்டின் உந்து சக்தியாக இருக்கும் நமது அரசியல் சாசனம் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மை மற்றும் அழகு வாய்ந்தது. கடந்த கூட்டத் தொடரில் பல வியக்கத்தகு சாதனைகள் செய்யப்பட்டன. இது அரசின் வெற்றியல்ல. நாடாளுமன்றத்தின் வெற்றி. ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அருண்ஜெட்லி, சுஷ்மாவுக்கு எம்.பி.க்கள் புகழஞ்சலி

முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி உட்பட மறைந்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் 10 பேருக்கு மக்களவையிலும், மாநிலங்களவையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் 1 நிமிடம் அமைதியாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் மறைந்தால், அஞ்சலி செலுத்தியபின் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும். ஆனால் அருண் ஜெட்லி அனைத்து கட்சி தலைவர்களையும் கவர்ந்தவர் என்பதால், அவருக்கு மற்ற உறுப்பினர்கள் புகழஞ்சலி செலுத்த அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதித்தார்.

அவர் வாசித்த இரங்கல் செய்தியில், ‘‘அருண்ஜெட்லி மிகச் சிறந்த அரசியல்வாதி, குறைகூறமுடியாத நபர். அவரது முக்கிய பங்களிப்புகள் சாதனைக்குரிய விஷயங்கள். ஜிஎஸ்டி, பினாமி சட்டம், திவால் விதிமுறைகள், ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜட்டுடன் இணைத்தது போன்ற முக்கிய முடிவுகளின் பின்னணியில் அவர் இருந்தார்’’ என்றார். இதேபோல் பல கட்சி உறுப்பினர்களும், மறைந்த அருண்ஜெட்லியை புகழ்ந்து பேசினர்.

மாநிலங்களவை காவலர்கள் சீருடை நிறம் மாற்றம்

மாநிலங்களவையில் காவலர்களின் சீருடை நிறம் மாற்றப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு காவலர்கள் வெள்ளை உடை அணிந்திருந்தனர். தற்போது அதற்கு பதிலாக ராணுவ வீரர்களை ஒத்த ஆலிவ் பச்சை நிற உடையும், தலைக்கு தொப்பியும் அளிக்கப்பட்டுள்ளது. புதிய சீருடையில் நேற்று அவர்கள் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Parliament , Parliment drops
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...