×

5 சதவீதத்துக்கு கீழ் பொருளாதாரம் வீழ்ச்சியா? : மத்திய அமைச்சர் காட்டம்

நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்துக்கு கீழ் வீழ்ச்சி அடையும் நிலையில் உள்ளது என்ற ஆம் ஆத்மி எம்.பி.யின் கேள்விக்கு, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில் பதில் அளித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய ஆம் ஆத்மி கட்சியின் எம்பி பக்வந்த் மான் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்துக்கு கீழ் வீழ்ச்சி அடையும் நிலையை எதிர்நோக்கி உள்ளது என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் பேசியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்துக்கு கீழ் வீழ்ச்சி அடையும் நிலையில் இல்லை. பொருளாதார வீழ்ச்சி குறித்த புள்ளி விவரங்களை எங்கு இருந்து பெற்றீர்கள். அதனை எனக்கு காட்டுங்கள் பார்ப்போம். உலகில் பல்வேறு நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகின்றது. 2025ம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும். தேசிய புள்ளியியல் அலுவலக தகவலின்படி 2014-2019ம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது சராசரியாக 7.5 சதவீதம் ஆகும். இது ஜி-20 நாடுகளிலேயே அதிகபட்ச சதவீதமாகும்.

பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதை உறுதி செய்யும் வகையில் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக இயங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக, தொழிற்சாலைகள், அந்நிய நேரடி முதலீடு மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி கொண்டு வந்ததன் மூலமாக கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முதலீட்டு நடவடிக்கையை அதிகரிக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியானது 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர், எளிதாக தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள் வரிசையில் இந்தியா முன்னேற்றம் பெற்றது. 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் 2018ம் ஆண்டில் 77வது இடத்தில் இருந்த இந்தியா 2019ம் ஆண்டு 63வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags : Kattam , economy falling, below 5 percent,Union Minister Kattam
× RELATED கச்சத்தீவு குறித்து உண்மைக்கு...