நாடாளுமன்ற குளிர்கால தொடர் துவக்கம் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் பல பிரச்னைகளை எழுப்பி அமளி

புதுடெல்லி : நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, காங்கிரஸ் எம்.பி.க்கள் 30 பேர் அவையின் மையப் பகுதிக்கு சென்று பல்வேறு பிரச்னைகளை எழுப்பி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். நாடாளுமன்றத்தில் மறைந்த உறுப்பினர்கள் அருண்ஜெட்லி உட்பட 10 பேருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் நேற்று தொடங்கியது. அவையை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டம் தொடர்ந்து 2 நாட்கள் நடத்தப்பட்டது. ஆனாலும் நேற்று வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் அமளி நிலவியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் எம்.பி.க்கள் 30 பேர் அவையின் மையப் பகுதிக்கு வந்தனர். பொய் வழக்கு போடுதல் உட்பட எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதலை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். தேசிய மாநாட்டு கட்சி எம்.பி.க்களும் அவையின் மையப் பகுதிக்கு வந்து பரூக் அப்துல்லா கைது விவகாரத்தை எழுப்பினர்.

பரூக் அப்துல்லா கைதை கண்டித்து திமுக எம்.பி, டி.ஆர்.பாலு, புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி தலைவர் பிரேம்சந்திரன் ஆகியோர் பேசினர். டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘ஒரு எம்.பி.யை வீட்டுக் காவலில் வைத்திருப்பது தவறு. அவர் மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என்றார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ், திரிணாமுல், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவாக கோஷம் எழுப்பினர். மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதிக்காதது அடாவடித்தனமான செயல். காஷ்மீர் செல்ல எங்கள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எம்.பி.க்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது’’ என்றார். ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் பற்றி அவர் தெரிவித்த தரக்குறைவான வார்த்தைக்கு அவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதை அவையில் குறிப்பில் இருந்து நீக்குவது பற்றி ஆய்வு செய்வேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

பா.ஜ.வுடன் உறவை முறித்துக் கொண்டு, எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்த சிவசேனா எம்.பி.க்கள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம் பிர்லா சமாதானப்படுத்தினார். கேள்வி நேரத்துக்குப்பின், உறுப்பினர்களுக்கு தங்கள் பிரச்னையை எழுப்ப வாய்ப்பு அளிக்கப்படும் என்றார். ‘‘நாடாளுமன்றம் கோஷம் எழுப்பும் இடம் அல்ல, விவாதம் செய்யும் இடம். அனைத்து பிரச்னைகள் பற்றியும் விவாதம் நடத்த நான் தயார்’’ என அவர் கூறினார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷியும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அமளிக்கு இடையே நடந்த கேள்வி நேரத்தில் மொத்தம் 7 கேள்விகள் மற்றும் அது தொடர்பாக துணைக் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டன.

Related Stories: