வருமான வரித்துறை வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு வாரன்ட் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, முன்னணி நடிகர்களை கொண்டு, பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2007-08, 2008-09 ஆண்டுகளில் தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தகவல்வந்தது. அதன்படி அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2010ம் ஆண்டு சோதனை நடத்தினர். அதில், அவர் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி மலர்மதி முன்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், ஞானவேல்ராஜாவிடம் கேள்விகள் கேட்டு, குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறைக்காக ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீல்களும் ஆஜராகவில்லை. பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் ஷீலா, நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: