×

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மாணவர்கள் போராட்டத்தால் குலுங்கியது டெல்லி

* பலமுறை தடியடி நடத்தியும் கலைந்து செல்லாததால் பதற்றம்

புதுடெல்லி: விடுதிக் கட்டண உயர்வை திரும்ப கோரி நாடாளுமன்றத்தை நோக்கி தடையை மீறி  ஜேஎன்யு மாணவர் சங்கத்தினர் நேற்று பேரணி சென்றனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.  இருப்பினும் மாணவர்கள் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், விடுதிக்கட்டணம் 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதுதவிர ஆடை மற்றும் நேரக் கட்டுப்பாடு உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர்கள் கடந்த 3 வாரமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.  ஜேஎன்யு மாணவர் சங்கம், கல்வியை பாதுகாக்கவும், பிரச்னையை அவையில் எழுப்பவும் வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்வதாக அறிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  தடையை மீறி மாணவர்கள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவியது. இதையடுத்து  மாலை 3.24 மணிக்கு ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அயிஷி கோஷ் உள்பட 100 பேரை போலீசார் கல்காஜி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

கலைய மறுத்து மாணவர்கள் தடைகளை தாண்டி செல்ல முற்பட்டதால் கூட்டத்தை கலைக்க போலீசார்  தடியடி நடத்தினர். ஆனாலும் மாண வர்கள் தொடர்ந்து முன்னேறினர். 600 மீட்டர் தொலைவில் பாபா கங்காநாத் மார்கில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர்  தடுப்புகளை அகற்றி மாணவர்களை செல்ல அனுமதித்தனர்.  லோதி சாலை அருகே  சப்தர்ஜங்  சமாதி  அருகே மீண்டும் பேரணியை போலீசார் தடுத்தனர்
நேரம் செல்லச்செல்ல போராட்டம் காரணமாக டெல்லி முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

மாணவர்கள் சட்டம் ஒழுங்கை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று போலீசார் வலியுறுத் தினர். இதனிடையே இரவு 7 மணிக்கு தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆரோபிந்தோ மார்க் பகுதியில் இருந்து மாணவர்களை மீண்டும் போலீசார் விரட்டி அடித்தனர். இருப்பினும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் டெல்லியில் இரவிலும் பதற்றம் நீடித்தது. மக்களவையில்  கேள்வி நேரத்துக்கு முன் ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர் டேனிஷ் அலி, ஏழை மாணவர்களின் கல்வி கட்டண உயர்வால் பாதிக்கப்படக் கூடாது.  அவர்கள் உயர் கல்வியை தொடரும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags : Delhi ,parliament ,protest students , Delhi was shaken , protest students', parliament
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...