ஆந்திராவில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் விஏஓ.க்கள் சரமாரி மோதல் ஒருவர் காது பறிபோனது : 2 பேரும் சஸ்பெண்ட்

திருமலை: ஆந்திராவில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் விஏஓ காதை மற்றொரு விஏஓ கடித்து துப்பினார். இதையடுத்து 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து கர்னூல் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆந்திராவின் சுன்கேசுலு கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வருபவர் வேணுகோபால். இவர் கூடுதலாக கர்னூல் தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகவும் உள்ளார். நேற்று முன்தினம் கர்னூல் மண்டலத்திற்கு உட்பட்ட ஜவ்கராபுரம் விஏஓ கிருஷ்ண தேவராயலு  கர்னூல் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். அப்போது வேணுகோபாலிடம் தனக்கு ஏற்கனவே தரவேண்டிய பணத்தை கேட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொண்டனர்.

மேலும் ஆத்திரமடைந்த கிருஷ்ண தேவராயலு, வேணுகோபாலின் காதை கடித்து துப்பினாராம். இதில் படுகாயமடைந்த வேணுகோபாலை ஊழியர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு காது அறுவை சிகிச்சை நடந்தது. இதேபோல் படுகாயமடைந்த கிருஷ்ண தேவராயலு கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த கர்னூல் தாசில்தார் திருப்பதிசாய் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் இந்த ஆய்வறிக்கையை கலெக்டர், ஆர்டிஓ, டிஆர்ஓ  ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து கலெக்டர் வீரபாண்டியன், 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: