புதிய குடிமக்கள் திருத்த மசோதா இந்திய குடிமக்களை அகதிகளாக்கிவிடும் : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கூச்பெஹார்: நாடாளுமன்றத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள குடிமக்கள் சட்டத்திருத்த மசோதா சட்டபூர்வ குடிமக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கும் என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பான மசோதா கடந்த ஜனவரி 8ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யாததால் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மத்திய பாஜ அரசு, தற்போது தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய குடிமக்கள் திருத்த மசோதா 2019ஐ விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ள குடிமக்கள் திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவு மசோதாவின் மறுவடிவமே. இந்த மசோதாவை அமல்படுத்துவதன் மூலம் வங்காள மக்கள் மற்றும் இந்துக்களை சட்டபூர்வ குடிமக்கள் பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவார்கள். இந்த மசோதாவில் இந்துக்கள், ஜெயின்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், வங்கதேச, பாகிஸ்தான், ஆப்கனை சேர்ந்த புத்தமதத்தினர் இந்தியாவில் 7 ஆண்டுகள் வசித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இடம்பெற்றுள்ளது. நாங்கள் மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வந்ததும்,கூக்பெஹார் மாவட்டத்தில் இருந்த அகதிகளுக்கு  குடியுரிமை அளித்தோம். அவர்கள் 6 ஆண்டுகள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என நிபந்தனை எதையும் விதிக்கவில்லை. மந்த நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க மத்திய அரசு திட்டமிடாத நிலையில், ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டிவருகிறது. இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

Related Stories: