உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இவருக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே (63) நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து சரத் அரவிந்த் பாப்ேட நேற்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சரத் அரவிந்த் பாப்டே பதவிக்காலம் 17 மாதங்கள் ஆகும். வருகிற 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். மேலும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, டி.எஸ்.தாகூர், ஜே.எஸ்.கெஹர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்தவர்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 1956ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிறந்தவர் சரத் அரவிந்த் பாப்டே. இவரது தந்தை பிரபல மூத்த வழக்கறிஞர் அரவிந்த் சீனிவாஸ் பாப்டே. சட்டம் முடித்த பாப்டே 1978ம் ஆண்டு மகாராஷ்டிரா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 1998ம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2000ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 2012ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார். 2013ம் ஆண்டு ஏப்ரல் 12ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.

ஸ்ட்ரெச்சரில் வந்த தாயாரிடம் ஆசி

பதவியேற்பு விழாவிற்காக சரத் அரவிந்த் பாப்டேயின் தாயார் ஜனாதிபதி மாளிகைக்கு ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்பட்டார். பாப்டே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின்னர் தனது தாயாரின் கால்களை தொட்டு ஆசிர்வாதம் பெற்றார்.

Related Stories: