உத்தரகாண்ட் அருகேயுள்ள கலாபானியில் இந்தியா வெளியேற வேண்டும் : நேபாள பிரதமர் ஒலி பேச்சு

புதுடெல்லி: கலாபானி எங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்று கூறியுள்ள நேபாள பிரதமர், அங்கிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து கடந்த அக்டோபர் 31ம் தேதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து மத்திய அரசு புதிய இந்திய வரைபடத்தையும் வெளியிட்டிருந்தது. அதில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் பகுதிகள் அனைத்தும் இந்தியாவுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  இந்தியா, நேபாளம், திபெத் மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லைப் பகுதியை உத்தரகாண்ட் மாநிலத்துக்குள் குறிப்பிடப்பட்டு இருப்பது கண்டனத்துகுரியது என நேபாளம் தெரிவித்திருந்தது.

இந்த எல்லை பிரச்னை குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கலாபானியை யாருக்கும் விட்டுக்தரக்கூடாது என நேபாளத்தில் கோரிக்கை வலுத்துவருகிறது. இதையடுத்து நேற்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான யுவசங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் கே.பி. ஒலி பங்கேற்று பேசுகையில், ‘‘எங்கள் நாட்டின் ஒரு அங்குலத்தை கூட பிற நாடு ஆக்கிரமிப்பதை அனுமதிக்க மாட்டோம். எனவே கலாபானியில் இருந்து இந்திய ராணும் வெளியேற வேண்டும். அப்போதுதான் எல்லை பிரச்னை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றார்.

Related Stories: