தமிழக மீனவர்கள் 3 பேர் அபுதாபியில் சிறைவைப்பு : கலெக்டரிடம் உறவினர்கள் கண்ணீர்

நாகர்கோவில்: அபுதாபியில் தமிழக மீனவர்கள் மூன்று பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டரிடம் உறவினர்கள் கண்ணீர் மனு அளித்துள்ளனர்.  குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தை சேர்ந்த ஆரோக்கியம் (44), மைக்கேல் நாயகம் (49), நாகப்பட்டினம் திருமுல்லைவாயல் காளியப்பன் (39) ஆகிய 3 மீனவர்களும் ஈரான் நாட்டில் கீஸ் என்ற இடத்தில் இருந்து அப்துல்லா சலாம் என்பவரது விசைப்படகில் கடந்த அக்டோபர் 25ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 29ம் தேதி அபுதாபி கடல் எல்லையை தாண்டியதாக அவர்களை அபுதாபி கடலோர காவல் படை கைது செய்து அல்பகரா என்ற இடத்தில் சிறை வைத்துள்ளது.

அபுதாபியில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள போதிய வசதியின்றி அவதிப்படுகின்றனர். அவர்களை மீண்டும் ஈரான் நாட்டுக்கு அனுப்பினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து, வாழ்வாதாரத்திற்கும் பேரிழப்பு ஏற்படும் என்ற அச்சத்தையும், மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர். அவர்களை அபுதாபி கடலோர காவல் படையிடம் இருந்து மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அவர்களுடன் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

Related Stories: