திருச்சியில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு : கர்ப்பிணிகள் 5 பேர் நிராகரிப்பு

திருச்சி: திருச்சியில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுக்கு வந்த 5 கர்ப்பிணிகள் நிராகரிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் பெண்களுக்கான காவலர் தேர்வு திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று துவங்கியது. 700 பெண்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 634பேர் கலந்து கொண்டனர். திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், பெரம்பலூர் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வுக்கு 5 கர்ப்பிணிகள் வந்திருந்தனர். அவர்களிடம் விசாரித்த அதிகாரிகள், அவர்கள் தேர்வுக்கு தகுதியற்றவர்கள் என நிராகரித்தனர்.

உயரம் சரிபார்க்கப்பட்ட நிலையில், தங்களை ஓட்டத்தில் அனுமதிக்கும்படி கர்ப்பிணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். திருவானைக்காவலை சேர்ந்த ஒரு பெண் கைக்குழந்தையுடன் தேர்வுக்கு வந்திருந்தார். அவருக்கு உயரம் அளந்தபோது, குறைவாக இருந்தாக நிராகரிக்கப்பட்டார். அதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து டிஐஜி முன்னிலையில் எலக்ட்ரானிக் மெஷினில் உயரம் சரிபார்க்கப்பட்டது. அப்போது உயரம் சரியாக இருக்கவே தேர்வில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: