டவர் லைன் செல்லும் இடங்களில் விவசாயம் செய்யலாம் : அமைச்சர் தங்கமணி சொல்கிறார்

மொடக்குறிச்சி:  ஈரோடு மாவட்டம் பாசூர் - சோழசிராமணி செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மின் கதவணையின் ஈரோடு மாவட்ட கரையின் பால தடுப்பு சுவர் கடந்த 13ம் தேதி சரிந்து விழுந்தது. பாலத்தை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி  பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாலத்தை இன்னும் 10 நாட்களில் சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து, பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். உயர் மின் கோபுர விவகாரம் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக விவசாயிகள் திட்டமிட்டு போராட்டம் நடத்துகின்றனர். உயர் மின்னழுத்த கோபுரம் தொடர்பாக புதிய அரசாணை வெளியிடப்பட்டு தென்னை மரங்களுக்கு ரூ.37 ஆயிரத்து 600, டவர் லைன் அமைத்ததற்கு 100 சதவீதம், லைன் செல்லும் இடங்களுக்கு 20 சதவீதம் என இழப்பீடு தொகை வழங்க புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்காக உண்மையான விவசாயிகள் இன்று முதலமைச்சரை நேரில் சந்திக்கின்றனர். அதனை திசை திருப்புவதற்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் மின்கம்பி செல்லும் இடங்களில் விவசாயம் செய்ய முடியாது என கூறி வருவது தவறானது. டவர் லைன் செல்லும் இடங்களில் விவசாயம் செய்யலாம். கேரளாவில் கேபிள் வழியாக கொண்டு செல்கிறார்கள் என கூறப்பட்டது. ஆனால் 175 டவர் லைன்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: