×

உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு 13 மாவட்டங்களில் சாலை மறியல் ஏராளமான விவசாயிகள் கைது

சென்னை: விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  ஏராளமான விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும், பவர்கிரிட் நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு புதிய மின் வழித்தடங்களை அமைக்கிறது. இத்திட்டத்துக்காக அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களால், திருவண்ணாமலை, வேலூர், சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் அனுமதியும், ஒப்புதலும் பெறாமல் ‘அவசரகால அத்தியாவசிய திட்டம்’ எனும் பொது அறிவிப்பின் மூலம் அத்துமீறி அமைக்கப்படும் ராட்சத உயர் மின்கோபுரங்களால், விவசாய விளை நிலங்கள் பறிபோகிறது. எனவே, இத்திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அழிக்கும் இத்திட்டத்தை கைவிட வேண்டும், நிலத்தடியில் கேபிள் மூலம் மின் வழித்தடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட மறுத்துவிட்டது. இந்நிலையில், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை பஸ் நிலையம் அறிவொளி பூங்கா அருகில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது, விவசாய நிலங்களை அழிக்காமல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும், மின் கோபுரம் அமைப்பதால் நிலத்தின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. எனவே, சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும், தனியார் நிலங்களில் அமைத்த செல்போன் டவர்களுக்கு மாத வாடகை வழங்குவதை போல, உயர்மின் கோபுரங்களுக்கும் மாதாந்திர வாடகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். மறியலால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து 38 பெண்கள் உள்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் மறியலில் ஈடுபட்ட 30 விவசாயிகளை கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் ஆற்காட்டில்  35 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம்: சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, மேச்சேரி, சங்ககிரியில் நடந்த மறியலில் 6 பெண்கள் உள்பட 80 பேரும், தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகரம், பென்னாகரம், பாப்பாரப்பட்டியில் 60 பேரும் கைதாயினர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளியிலும், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையத்திலும் மறியலில் பலர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு:  ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 74 பேரும், மொடக்குறிச்சியில் 50 பேரும், பவானியில் 125 ேபரும், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 86 பேரும், காங்கயத்தில் 80 பேரும், உடுமலை கணியூரில் 300 பேரும், கோவை மாவட்டம் சூலூரில் 52 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல தமிழகம் முழுவதும் நடந்த மறியலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Tags : Road raisers ,districts ,towers ,Protesters , Protesters set up high-powered towers ,arrested
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...