கல்வி மாவட்டங்கள் எண்ணிக்கையை அதிகரித்ததால் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளுக்கு பரிசுத்தொகை நிறுத்தம்

* மாநில போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிப்பு

* சிறப்பு செய்தி

கல்வி மாவட்டங்கள் எண்ணிக்கையை அதிகரித்ததையடுத்து பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாநில போட்டிகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்பப் பள்ளிகள், 7 ஆயிரத்துக்கும் அதிகமான நடுநிலைப்பள்ளிகள், 3 ஆயிரத்துக்கும் அதிகமான உயர்நிலைப்பள்ளிகள், 2,700க்கும் அதிகமான மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவைகளில் 56 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டும் அவசியம். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுத்துறையில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், மாணவர்கள் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு 600 பரிசுத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த பரிசுத்தொகை மாநில போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவியாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. மேலும் நடப்பு கல்வியாண்டு முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம், அதிகப்படியான மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

ஆனால், நடப்பு கல்வி ஆண்டு முதல் மண்டல போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 600 பரிசுத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநில போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், மாநில போட்டிகளுக்கு தகுதியான அரசு பள்ளி மாணவர்கள் போக்குவரத்து, உணவு, தங்கும் செலவினம் ஆகியவற்றுக்கான நிதிவசதியின்றி போட்டிகளில் பங்கேற்பதை தவிர்க்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. எனவே, மாநில போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கான செலவித்தொகைைய வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர முடியும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: