×

புற்றுநோய், கல்லீரல் நோய்க்கு தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: தடைசெய்யப்பட்ட புற்று நோய் மற்றும் கல்லீரல் நோய்க்கான மருந்துகள் வங்கதேசத்தில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.மருந்து பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதேநேரத்தில், சீனா போன்ற நாடுகளில் இருந்து மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் இருந்து தடை செய்யப்பட்ட புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்க்கான மருந்துகள் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவது நிபுணர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.தடை செய்யப்பட்ட மற்றும் போலி மருந்துகளின் சட்டவிரோத விற்பனையால் மருந்து நிறுவனங்களின் வருவாய் மட்டுமின்றி, நோயாளிகளின் உடல் நலன் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகிறது. இதுகுறித்து மருந்துத்துறையை சேர்ந்த சிலர் கூறியதாவது:தடை செய்யப்பட்ட மற்றும் போலி மருந்துகள் எந்த அளவு விற்கப்படுகிறது என்று துல்லியமாக கணிக்கப்படவில்லை.

இருப்பினும், கள்ளச்சந்தையில் புற்றுநோய் மருந்துகள் விற்பனை மட்டும் சுமார் 300 கோடிக்கு நடைபெறுகிறது. இதில் 12 சதவீத மருந்துகள், மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் பிரபல மருந்துகளின் போலி தயாரிப்புகள். உதாரணமாக இப்ரூடினிப், ஓசிமர்டினிப், கிரைசோடினிப் போன்ற புற்றுநோய் மருந்துகள் போலியாக தயாரிக்கப்பட்டு ஒரிஜினல் விலையை விட மிக குறைவாக விற்கப்படுகிறது. அதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் விற்கப்படும் மருந்து சில ஆயிரம் ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் கிடைக்கும். ஆனால் அது மிகவும் ஆபத்தானது. பார்கோடு போன்ற நடைமுறைகளும் இந்த போலி மற்றும் தடைசெய்யப்பட்ட மருந்துகளை தடுக்க உதவவில்லை.வாட்ஸ்ஆப், இமெயில் மூலம் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் இந்த மருந்துகளை வங்கதேச நிறுவனங்கள் சந்தைப்படுத்துகின்றன என்பது மருந்துத்துறை சார்ந்த ஊடகம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மருந்துகள் போல புற்றுநோய் மருந்துகள் மருந்து கடைகள் மூலம் சாதாரணமாக விற்கப்படுவதில்லை. விநியோகஸ்தர்கள் சிலர் உதவியுடன் இவை விற்கப்படுதுண்டு. எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறியலாம். போலி மருந்து விற்பனையை தடுக்க மருந்து நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொள்ள உள்ளன என்றனர்.




Tags : Cancer, liver ,disease, Prohibited, drugs
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...