×

தங்கசாலை பஸ் நிலையத்தில் வெயில், மழையில் ஒதுங்க கூட இடமின்றி தவிக்கும் பயணிகள் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தண்டையார்பேட்டை: வடசென்னையில் உள்ள தங்கசாலை பேருந்து நிலையத்தில் இருந்து காரனோடை, செங்குன்றம், மீஞ்சூர், எண்ணூர், திருவெற்றியூர், மூலக்கடை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட  பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது.  சுற்றுப் பகுதி மக்கள் இங்கு வந்து பஸ் பிடித்து, கோயம்பேடு, வடபழனி, திருவேற்காடு, புதூர், வில்லிவாக்கம், காரனோடை, எண்ணூர், தி.நகர், கே.கே.நகர், பூக்கடை  என பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். தினசரி ஆயிரத்திற்கும்   மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்தில் எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது.குறிப்பாக, பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி,  குடிநீர்,  கழிப்பிட வசதி உள்ளிட்டவை இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

பேருந்து நிலையத்தில் மதில்சுவர் கூட  இல்லை. இதை பயன்படுத்தி, பேருந்துக்காக காத்திருக்கும்  பயணிகளிடம் மர்ம நபர்கள் செல்போன், பர்ஸ், செயின் பறிப்பு ஆகிய செயலில் ஈடுபட்டு, எளிதாக தப்பித்து விடுகின்றனர்.  பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைக்கப்படாததால் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் ஆகியோர் வெயில்,  மழையில் சிரமப்படுகின்றனர். பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு மட்டும் கழிவரை உள்ளது. இதுவும் போதிய பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. காரனோடை, செங்குன்றம், மூலக்கடை, வியாசர்பாடி ஆகிய பகுதியில் இருந்து வருபவர்கள் தங்கசாலை பேருந்து நிலையத்திற்கு போக வேண்டுமானால் சாலையை கடக்க வேண்டும். சாலையில் சிக்னல் வசதி இல்லை.  போக்குவரத்து  போலீசார் யாரும் நிற்பதில்லை. இதனால் இப்பகுதியில்  அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பயணிகள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இந்த பஸ் நிலையத்தில் மேற்கூரை, இருக்கை, மின்விளக்கு,  குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Travelers ,bus stand ,Tangalle ,School Bus Station , Tangalle school, bus station, sun ,rain,seen
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி