போலி பயனாளிகள் பட்டியல் தயாரித்து கோடிக்கணக்கில் முறைகேடு 100 நாள் வேைல திட்டத்தில் நூதன மோசடி: தட்டிக்கேட்கும் பயனாளிகளை பழிவாங்குவதாக குற்றச்சாட்டு

சிறப்பு செய்தி:

100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்குவதில் கோடிக்கணக்கில் அப்பாவி கிராம மக்களின் ஊதியம் நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தற்போதைய தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவற்றால் வேளாண் பரப்பளவு படுவேகமாக சரிந்து வரும் நிலையில், நகரங்களை நோக்கி இடம்பெயரும் மக்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர்களுக்கான வேலை உத்தரவாதத்தை ஏற்படுத்தி தருவதற்காக 2005ல் மத்திய அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாளுக்கு குறையாமல் வேலை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. 2006 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இத்திட்டம் தொடக்கத்தில் நாட்டில் 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

2008ல் நாடு முழுவதும் 661 மாவட்டங்களில் 2.62 லட்சம் கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. குளம், குட்டைகளை  தூர்வாருதல், நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், வயல்களில் மண் வரப்பு, கல் வரப்பு கட்டுவது, தனி நபர் கழிவறை, கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டுதல், மரம் நடுதல், துப்புரவு பணி என பலவகையான  பணிகளை இந்த தொழிலாளர்கள் மேற்கொள்கின்றனர்.  இவர்களுக்கான ஊதியம்,  கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 224ஆக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 5 உயர்த்தப்பட்டு 229 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கான பணி  7 மணி நேரம். ஒரு மணி நேர ஓய்வுடன் மொத்தம் 8 மணி நேரம் பணி தளத்தில் இருக்க வேண்டும். ஆனால், உண்மையில் 160 முதல் 190 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப ஊதியம் வழங்குவதாக காரணம் கூறப்படுகிறது. பணியை அளவிட பொதுவான எவ்வித மதிப்பீட்டு முறையும் இல்லாத  நிலையில், அப்பாவி  தொழிலாளர்களின் ஊதியம்  அநியாயமாக பறிக்கப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் ஊதியம் பல வகைகளில் ஏமாற்றப்படுவதாகவும், இந்த முறைகேட்டில் ஊராட்சி செயலர் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இதற்கென உள்ள அலுவலர்கள் வரை ஈடுபடுகின்றனர். ஏற்கனவே, ஊரக வளர்ச்சித்துறையில் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் இந்திரா நினைவு வீடு கட்டும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா என்ற பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தனி நபர் கழிவறை கட்டும் திட்டம் என பல திட்டங்களில் பணிகள் நடைபெறாமலேயே போலி பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கோடிக்கணக்கில் முறைகேடு நடந்து வருகிறது. பல ஊராட்சி ஒன்றியங்களில் இதுதொடர்பாக புகார் எழுந்து பல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை பிடிஓக்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், ஊராட்சி செயலர்கள் என சஸ்பெண்ட், டிஸ்மிஸ் நடவடிக்கைகளும் பாய்ந்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் இதுபோன்று அரக்கோணம், காவேரிப்பாக்கம், திமிரி, அணைக்கட்டு, மாதனூர், வேலூர், பேரணாம்பட்டு, ஆலங்காயம் என பல ஒன்றியங்களில் பணிகள் நடைபெறாமலேயே நடந்ததாக கணக்கு காட்டப்பட்டு கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வேலூரில் சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டரும் நடவடிக்கைக்கு ஆளாகி 35 லட்சத்தை திரும்ப செலுத்தினார்.

இந்த நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கான ஊதியத்திேலயே தங்கள் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இத்தகைய முறைகேடுகள் தொடர்பாக நாமக்கல், பொள்ளாச்சி என மாநிலம் முழுவதுமே தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் வேலூர் ஒன்றியத்தில் குப்பம், ஊசூர் உட்பட பல ஊராட்சிகளில் பயனாளிகளின் பட்டியலில் பெரும் குளறுபடி நடந்துள்ளது வௌிச்சத்துக்கு வந்துள்ளது.

குறிப்பாக 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி தள பொறுப்பாளர் ஊராட்சி செயலர் மூலம் தரும் விவரங்களை கணினியில் பதிவேற்றுவது, என்எம்ஆர் பட்டியல் போடுவது, எப்டிஓ என்ற மத்திய அரசின் நிதி கிடைத்ததும் பயனாளிகளின் வேலைநாட்களுக்கேற்ப கூலியை அவர்கள் கணக்கில் நேரடியாக வங்கியில் செலுத்துவது போன்ற பணிகள் கம்ப்யூட்டர் ஆபரேட்டரின் பணியாகும். இப்பணியை அதற்கான மேலாளர் கண்காணிக்க வேண்டும். ஆனால், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், 100 நாள் வேலைத்திட்டத்தை கண்காணிக்கும் மேலாளருக்கே தெரியாமல் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதாவது பயனாளிகளின் கணக்கு செல்ல வேண்டிய ஊதியத்தை போலி கணக்கு மூலம் தங்கள் வங்கி கணக்கில் கொண்டு வந்து விடுகின்றனர். ஏற்கனவே இதுபோன்றுதான் போலி பயனாளிகள் பட்டியலை தயார் செய்து தனிநபர் கழிவறை திட்டம், வீடு கட்டும் திட்டங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களின் தில்லாலங்கடி வேலைகள் வெளிச்சத்துக்கு வந்தது. அதேபோல் 100 நாள் வேலைத்திட்டத்திலும் முறைகேடுகள் தொடர்ந்து வருகிறது.

இம்முறைகேடு குறித்து அறிந்தும் அப்பாவி கிராமப்புற பயனாளிகள் வாய்மூடி மவுனியாகிவிடுகின்றனர். அல்லது தட்டிக்கேட்கும் பயனாளிகளுக்கு சரிவர வேலை வழங்காமல் இழுத்தடிப்பது, கடினமான பணிகளை பணிதளத்தில் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஊராட்சி செயலாளர் மூலம் ஈடுபடுகின்றனர்.  வட்டார வளர்ச்சி அலுவலகங்களை ‘பல’ விஷயங்களில் அனுசரித்து போக வேண்டும் என்பதால் ஊராட்சி செயலாளர்களும் இவ்விஷயத்தை பயனாளிகளிடம் வேறு வகையில் கையாளுகின்றனர். இவ்வாறு மாநிலம் முழுவதும் 100 நாள் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைந்து பயனாளிகளுக்கு அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘முறைகேடுகள் நடக்கிறது என்பதற்காகவே ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒன்றிய அலுவலக பணிகளை பதிவேற்ற, சத்துணவு திட்டம், 100 நாள் திட்டம் என ஒவ்வொன்றுக்கும் 3 முதல் 6 பேர் வரை கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் அவுட்சோர்ஸிங் முறையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

தற்காலிக பணியாளர்கள் என்பதால் முறைகேட்டில் ஈடுபட்டாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதனால் தெரிந்தே முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். சில ஒன்றியங்களில் அதிகாரிகளே இவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். சில ஒன்றியங்களில் அதிகாரிகளுக்கு தெரியாமல் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் தன்னிச்சையாக முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இவ்விஷயத்தில் அப்பாவி பயனாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலையும்’ என்றனர்.

பின்பற்றப்படாத விதிமுறை

100 நாள் திட்ட பணியாளர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் சென்று வேலை செய்ய வேண்டுமானால், போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். அல்லது பத்து சதவீத கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும். மேலும், இந்த சட்டத்தின்படி 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்க வேண்டும். இந்த விதிமுறைகள் எதுவும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை.

பயன்பெறும் குடும்பங்கள்

நாடு முழுவதும் 661 மாவட்டங்களில் 52.04 லட்சம் குடும்பங்கள் 100 நாள் திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருகின்றன. தமிழகத்தில் 2.60 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. நாட்டிலேயே அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் மட்டும் 13.38 லட்சம் குடும்பங்கள் 100 நாள் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை பெற்றுள்ளன.

புகாருக்கு இலவச போன்

100 நாள் திட்டம் தொடர்பான தகவல்களை பெறவும், பயனாளிகள் தங்கள் புகார்களை தெரிவிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கட்டணமில்லா 1299 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: