×

3 ஆண்டாக இழுத்தடிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பு:மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

* உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பதவிகள் காலியாக இருக்கின்றன.
* 2016ம்  ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
* ஆனால் பல்வேறு காரணங்களை கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை  நடத்தாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது.

புதுடெல்லி: தமிழகத்தில் அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பதவிகள் காலியாக இருக்கின்றன. இந்த பதவிகளுக்காக 2016ம் ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களை கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்து விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை இந்தாண்டு அக்டோபர் இறுதி வாரத்திற்குள் கட்டாயம் வெளியிட்டு அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜூலை 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையமும் நீதிமன்றத்தில் உறுதியளித்தனர். இதையடுத்து கடந்த மாதம் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏதாவது அறிவிப்பு மாநில அரசு தரப்பில் இருந்து வரும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.   இந்த சூழலில் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,” தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வார்டு வரையறை பணி அனைத்தும் முடிந்து விட்டது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தற்போது தேர்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது எப்போது திரும்பி வரும் என்று தெரியாது என்பதால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக கூடுதலாக மேலும் 4 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு நடக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.    இந்த நிலையில், வழக்கறிஞர் ஜெய் சுகின், உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 25ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,” தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியிட்டு அதன் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்து இருந்தது. ஆனால் அதனை தற்போது மீறும் வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.

இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். அதனால் உறுதியளித்தப்படி தேர்தலை நடத்தாத தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட இரண்டு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா, தனது வாதத்தில், “மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களால் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த காலதாமதம் ஆனது. இதில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் நிறைவு செய்து விட்டோம். இதில் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் அறிவிப்பாணை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தனது வாதத்தில், “தமிழகத்தில் தொகுதி மறுசீராய்வுகள் சரியான முறையில் நடத்தப்படவில்லை. அதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. அனைத்தும் அவசர கதியில் தான் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநிலத்தில் சுமார் 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகள் முழுமையாக முடிக்காமல் உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும். ஆனால் அதில் தேர்தல் சட்ட விதிகளின் படி அனைத்து பணிகளும் நடத்தி முடிக்க வேண்டும். இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து கூட்டாக செயல்படுகின்றன என வாதிட்டார்.

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இதைத்தவிர மீதமுள்ள 9 மாவட்டங்களிலும் மறுவரையறை பணிகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதில் தேர்தல் சட்ட விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும். மேலும் இதுகுறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அடுத்த மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் உள்ளாட்சி தொடர்பாக திமுக தொடர்ந்துள்ள மனுவும் டிசம்பர் 13ம் தேதி இந்த மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்றார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது அதனை நேரில் பார்வையிட மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேரடியாக வந்திருந்தார்.

Tags : elections ,Court orders state election ,Announcement , Local Election, State Election Commission, Supreme Court
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...