×

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 30 நாள் பரோல் தருமாறு ரவிச்சந்திரன் தாயார் அளித்த மனுவை நிராகரித்தது மதுரை சிறைத்துறை

மதுரை:  ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தனது மகன் ரவிச்சந்திரனுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவருக்கு இதுவரை 4 முறை மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டு வெளியே வந்துள்ளார். 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 14 ஆண்டுகள் என சிறை தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்படும் நிலையில், அரசியல் பிரச்சனை காரணமாக தனது மகன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படவில்லை.

மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என 2018-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அமைச்சரவை விடுதலை வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான பரிந்துரையை ஆளுநரிடம் அனுப்பி வைத்தது. அந்த பரிந்துரை நீண்ட காலமாக ஆளுநரின் கையெழுத்திற்காக காத்திருப்பில் உள்ளது. இந்த நிலையில், ரவிச்சந்திரன் நீண்ட நாள் பரோல் கேட்டு 2018 டிசம்பரில் மனு அளித்த போது, நீண்ட நாள் பரோல் வழங்குவது சாத்தியம் இல்லை. எனவே புதிதாக பரோல் மனு தாக்கல் செய்தால் 1 மாத காலம் பரோல் வழங்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த மார்ச் 27ம் தேதி ரவிச்சந்திரனுக்கு ஒருமாதம் சாதாரண விடுப்பு வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை மதுரை சிறைத்துறை நிராகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க இயலாது என்று ரவிச்சந்திரனின் தாயாருக்கு மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Ravichandran ,Rajiv Gandhi ,Madurai Prison , Rajiv Gandhi, Parole, Ravichandran, Madurai Prison
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி...