நெல்லையின் பாரம்பரிய பெருமைகள் இனி தென்காசிக்கு: அமைச்சர் பிரதிநிதித்துவமும் பறிபோகிறது

நெல்லை: தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள பட்டியலில் நெல்லை மாவட்டமும் முக்கிய இடம் பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் ஏற்கனவே பிரிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர் பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்திற்கு என இருந்த முக்கிய தனி சிறப்பு பாலை, முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி ஆகிய ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரே மாவட்டமாக இருந்தது. அதுபோல் தாமிரபரணி பிரிக்கப்படாத நெல்லை மாவட்ட பொதிகை மலையில் தோன்றி புன்னக்காயல் கடலில் கலந்தது. தூத்துக்குடி பிரிந்த பின்னர் இந்த இரு முக்கிய பெருமைகள் மறைந்தது. தற்போது தென்காசி மாவட்டம் தோன்றியுள்ளதால் மேலும் பல பாரம்பரிய பெருமைகள் வருகிற 22ம்தேதி முதல்  தென்காசிக்கு சொந்தமாகிறது. நெல்லை மாவட்டத்தின் எல்லை கேரளா மாநிலம் வரை இருந்தது. இனி சாலை வழி எல்லை தென்காசி மாவட்டத்திற்கு செல்கிறது.

வீரபூமியாக பெயர் பெற்ற பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தின் தியாகிகள் மற்றும் தேசபக்தர்களான மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மனின் மண் என்ற பெருமை ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற நிலையில் இப்போது வாஞ்சிநாதன், பூலிதேவன் போன்றவர்கள் தென்காசி மாவட்டத்தின் சொந்தகாரர்களாக மாறிவிட்டனர். அழகிய இயற்கை வளங்களை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் பல பகுதிகள் தென்காசி மாவட்ட எல்லைக்கு செல்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற குற்றாலம் மலை மற்றும் அருவிகள் இனி நெல்லை மாவட்டத்திற்கு சொந்தம் இல்லை. மாவட்டத்தின் முக்கிய பல அணைகளும் தென்காசிக்கு செல்கிறது. நெல்லை அடுத்தபடியாக உள்ள முக்கிய பெரிய நகரங்களான தென்காசி, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடியும் தென்காசிக்கு சென்று விட்டது. நெல்லை மாவட்டத்தின் அமைச்சராக இருந்துவரும் ராஜலட்சுமி இனி தென்காசி மாவட்ட அமைச்சராகிறார். நெல்லை மாவட்டத்திற்கு அமைச்சர் பிரிதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதுபோல் நெல்லை மாவட்டத்தின் அரசியல் தோன்றலான வைகோ தென்காசி மாவட்டத்துக்காரராகிறார்.

பாரம்பரியம் மிக்க ஆன்மீக கோயில்களும் பல தென்காசிக்கு செல்கின்றன. காசிவிஸ்வநாதர் கோயில், சங்கரநாராயண சாமி கோயில், இலஞ்சி, பன்பொழி கோயிலகளும் தென்காசி மாவட்டஎல்லைக்குள் செல்கின்றன. அறநிலையத்துறையில் துணை ஆணையர் நிலையில் உள்ள சங்கரநாராயணசாமி கோயில், உதவி ஆணையர் நிலையில் பண்பொழி, குற்றாலம், தென்காசி கோயில்கள் உள்ளன. இனி பிரிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் நெல்லை-பாளை இரட்டை நகரங்களுக்கு அடுத்தபடியாக  வள்ளியூர், அம்பை, திசையன்விளை ஆகியவையே பெரிய நகரங்களாக உள்ளன. ஒரே பெரிய கோயிலாக நெல்லையப்பர் கோயில் உள்ளது. மாவட்ட பிரிப்பால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து நெட்டீசன்களும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: