×

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு நிறுத்த வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை அரசு பழிவாங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதவி உயர்வு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதைத்தொடர்ந்து அரசு மருத்துவர்களுக்கு மெமோ மற்றும் இடமாற்றங்கள் அளிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை அரசு நிறுத்த வேண்டும் என 8 அரசு மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்ட நிலையில் அவர்களை பணியிட மாற்றம் செய்யும் உத்தரவை அரசு திரும்ப பெறவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய நீதிபதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என கூறினார். மேலும் வழக்கு விசாரணையை வரும்  நவ. 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Tags : Government ,government doctors ,Strike action , Government Doctors, Government, Icort
× RELATED மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்