×

கிடப்பில் சாலை பணி கால்நடைகளுடன் சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டம்: காரைக்குடி அருகே பரபரப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே வேட்டைக்காரன்பட்டியில் சாலை பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி அருகே வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு சாலை அமைக்க கடந்த ஆண்டு,  ஏற்கனவே இருந்த சாலை பெயர்க்கப்பட்டு ஜல்லி கொட்டப்பட்டது.  ஆனால் இதுவரை பணி துவங்க வில்லை. இதனால் இச்சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சாலை அமைக்க வலியுறுத்தியும், அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்தும் அப்பகுதி மக்கள் நேற்று திடீரென கால்நடைகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சாலை பணி ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை அமைக்க பல முறை அதிகாரிகளிடம் கூறியும் செவிசாய்க்காமல் உள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக வேண்டிய நிலை உள்ளது. நடந்து கூட செல்ல முடியவில்லை. கர்ப்பிணிகள், உடல் நலம் சரியில்லாதவர்களை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலை உள்ளது. சாலை இல்லாததால் ஒரு வருடமாக அரசு பஸ் உள்ளே வருவது கிடையாது. இதேநிலை தொடர்ந்தால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

Tags : road ,Karaikudi , Road work, livestock, people struggle, Karaikudi
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...