×

நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாததால் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்

கொள்ளிடம்: கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை சுத்தம் செய்யாததால் இளைஞர்களே முன்வந்து சுத்தம் செய்ததை அந்த பகுதிமக்கள் பாராட்டினர். நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடிக்கும், கடலூர் மாவட்டம் வல்லம்படுகைக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கடந்த 1957ம் ஆண்டு இந்தப் பாலத்தின் வழியே போக்குவரத்து துவங்கியது. சென்னையிலிருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி மார்க்கமாக கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் இந்த பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

24 மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த பாலம் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பாலத்தின் துவக்கத்தில் இரு புறங்களிலும் புதர் மண்டி காணப்படுகிறது. மின்விளக்குகள் பராமரிக்கப்படவில்லை. இரவு நேரங்களில் பாலம் இருண்டு கிடக்கிறது. பாலம் முழுவதும் இரண்டு பக்கங்களிலும் மண் படிந்துள்ளதால், பாலத்தில் தேங்கும் நீரை வெளியேற்றும் அனைத்து குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் பாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் மக்கள்அவதிப்பட்டு வந்தனர்.

இதனை பராமரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் சார்பில் வல்லம்படுகையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பொறியாளர் ரமேஷ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை 4மணி நேரமாக சுத்தம் செய்தனர். இது குறித்து பொறியாளர் ரமேஷ் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றுப்பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல் உள்ளது. தொடர்ந்து பராமரிக்கவில்லை என்றால் பாலம் உடையும் அபாயம் ஏற்படும்.

முறையாக பராமரிப்பு செய்தால், மேலும் 50 ஆண்டுகளுக்கு வலிமை குன்றாமல் இருக்கும். பாலம் திடீரென உடையும் நிலை ஏற்பட்டால் 50 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று சுற்று வழியில் பயணிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே இதுவரை வலிமை குன்றாத பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறைப்படி பராமரிக்க வேண்டும் என்றார்.

Tags : Youths ,Loot River Bridge ,Highway Department , Highway Department, Koladi River Bridge, Youth
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...