பள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.921

நன்றி குங்குமம் முத்தாரம்

வெனிசுலாவின் குடிமகள் பாட்ரிஷியா. வயது24. அரசுப் பள்ளியில் வரலாறு பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியை. மாதச் சம்பளம் 3,12,000 பொலிவர்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தப் பணத்தைக் கொண்டு இரண்டு மாதம் ஜாலியாக செலவழிக்கலாம்.ஆனால், இன்று ஒரு நாள் கூட முழுமையாக சாப்பிட முடியாது. ஆம்; பாட்ரிஷியா வாங்கும் சம்பளத்தின் மதிப்பு வெறும் 13 அமெரிக்க டாலர்கள். அதாவது 921 ரூபாய்! ஹைபர் பணவீக்கத்தால் வெனிசுலாவின் பணமான பொலிவரின் மதிப்பு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. அத்துடன் உணவுப் பற்றாக்குறையும், விலைவாசி ஏற்றமும் அங்கே தலைவிரித்தாடுகிறது. இது வெனிசுலா மக்களின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 30 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அருகிலிருக்கும் தேசங்களில் அகதிகளாக தஞ்ச மடைந்துள்ளனர். ஆனால், பாட்ரிஷியா மாதிரியான பெண்களின் நிலையோ துயரக் கடல். வருமானப் பற்றாக்குறையால் கடந்த ஜூன் மாதம் ஆசிரியை வேலையைத் துறந்துவிட்டு கொலம்பியாவில் உள்ள ஒரு மது விடுதியில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார் பாட்ரிஷியா.

அங்கே ஒரு குடிகாரனால் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார். ஆனாலும் அந்த வேலையை அவரால் விட முடியாத நிலை. கிடைக்கும் மொத்த வருமானத்தையும் வெனிசுலாவில் வசிக்கும் குடும்பத்துக்கு அனுப்பிவிட்டு, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் டிப்ஸில் வாழ்க்கையை இரண்டு மாதங்கள் நகர்த்தினார். ஆனால், வெனிசுலாவின் விலையேற்றத்தால் பாட்ரிஷியா அனுப்பும் பணம் குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இல்லை. வேறு வழியின்றி அந்த விடுதியிலேயே பாலியல் தொழிலாளியாக மாறிவிட்டார் பாட்ரிஷியா. பாட்ரிஷியா மட்டுமல்ல, வெனிசுலாவில் போலீஸ், பத்திரிகையாளர், வங்கி ஊழியர் என கௌரவமாக வேலை பார்த்த ஆயிரக்கணக்கான பெண்களின் இன்றைய நிலை இதுதான்.‘‘ஆறு மாதங்களுக்கு முன்பு எங்கள் நிறுவனத்தை பேப்பர் பற்றாக்குறையால் மூடிவிட்டார்கள். இன்க் பற்றாக்குறையால் பாஸ்போர்ட்டும் எடுக்க முடியவில்லை. எப்படியோ ஈக்வடா ருக்கு வந்துவிட்டேன். இங்கே பாலியல் தொழிலாளியாக மாறுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை...’’ என்று சொல்லும்போதே ஜோலியின் குரல் உடைகிறது.

வெனிசுலாவின் தலைநகரான கரகாஸில் பிறந்து வளர்ந்த இவர், ஒரு பத்திரிகை நிருபர். வெனிசுலா பெண்களின் நிலை இதுவென்றால் ஆண்களின் நிலையோ இன்னும் சோகம். வேலை கிடைக்காமல் விரக்தி யடைந்த பல இளைஞர்கள் திருடர்களாகவும், கொலைகாரர்களாகவும் மாறிவிட்டார்கள். ‘‘வெனிசுலாவில் ஒரு மணி நேரத்துக்கு  மூன்றுபேர் பணத்துக் காகவும், ஸ்மார்ட்போனுக்காக வும் கொல்லப்படுகிறார்கள்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. 2014ல் மிஸ் வெனிசுலாவான மோனிகா பியர், தன் கணவருடன் காரில் சென்றிருக்கிறார். அவர்களை வழிமறித்த கொள்ளைக்கும்பல் இருவரையும் கொன்றுவிட்டு அவர்களிடமிருந்ததைத்திருடிச் சென்றுவிட்டது. அந்தக் கொள்ளையர்கள் எல்லோரும் நாட்டின் பொருளாதார நெருக்கடியால் வேலையை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவர்களுக்கேஇந்த நிலை என்றால் சாமானியர் களுக்கு எப்படியிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.இந்தநெருக்கடி நிலையைச் சமாளிக்க, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘பனா’ என்ற ஆப்பை அங்கே உருவாக்கியுள்ளனர். சாலையில் செல்லும்போது யாராவது தாக்கினாலோ, திருட முயற்சித்தாலோ ஆப்பில் பதிவு செய்துவிட்டால் போதும். உடனே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்துவிடுவார்கள். என்றாலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாருமே வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. பலர் பாதுகாப்புக்காக தங்களுடைய தனித்த வீடுகளைக்காலி செய்துவிட்டு குழுவாக வாழ் கின்ற தனியார் விடுதிகளில் தஞ்சமடைவது அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், மக்கள் வாழத் தகுதியற்ற, ஆபத் தான ஒரு தேசமாக மாறிவருகிறது வெனிசுலா.

Related Stories: