கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பா.ஜ.க வேட்பாளர் மீது மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்தவர் செருப்பு வீச்சு!

பெங்களூரு: கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பா.ஜ.க வேட்பாளர் மீது மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த ஒருவர் செருப்பை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கர்நாடக அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி தற்போது நடந்து வருகிறது.

இதற்கிடையில், ஜே.டி.எஸ் கட்சியை சேர்ந்த தகுநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. நாராயண கவுடா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், கே.ஆர்.பேட் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக நாராயண கவுடா தனது மனைவி, மகள் மற்றும் தொண்டர்களுடன் காரில் வந்தார். அவர் தாலுக்கா அலுவலகம் வரும் வழியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தள தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர், நாராயண கவுடாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பாஜக தொண்டர்கள் மற்றும் மஜத தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அறைக்குள் நுழைந்த போது கவுடா மீது ம.ஜ.த. கட்சியை சேர்நத ஒருவர செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தை கலைந்து போக செய்த போலீசார், கவுடாவுக்கு பாதுகாப்பு வழங்கினர். இதையடுத்து, அவர் பத்திரமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தொண்டர்களின் இந்த செயலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவிருப்பதாகவும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: