×

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து ஆப்கான் உள்துறை அமைச்சகம் தரப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் நான்கு ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தி இருப்பதாக அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆப்கானில் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களின் ஆதிக்கத்தைத் தடுக்க அந்நாட்டு ராணுவம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில் தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் ஆப்கானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதில் சமீபத்தில் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து ஆப்கானில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும் தலிபான் பிரதிநிதிகளும் இறங்கியுள்ளனர்.

Tags : Suicide attack ,soldiers ,Afghanistan , Afghanistan, Suicide Squad, Attack, 4 Soldiers, wounded
× RELATED இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே...