தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் சென்னையில் ஆர்ப்பாட்டம்: அயோத்தி தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது என குற்றச்சாட்டு

சென்னை: அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் தவஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த  2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘மனுதாரர்களான சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லாலா ஆகிய 3 தரப்பும் நிலத்தை  மூன்று பாகமாக சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்’ என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்த 3 தரப்பினர் உட்பட மொத்தம்  14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதலில் தலைமை நீதிபதி அமர்வில் இவை விசாரிக்கப்பட்டன.

பின்னர், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கியது. அதில், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நாங்கள் அனைவரும் ஒருமித்த உத்தரவை பிறப்பிகிறோம். அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட எந்த தடையும் கிடையாது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமும், அரசுக்கு சொந்தமானது என்பதை வருவாய் துறை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, இந்த நிலத்தை மத்திய அரசு தனது கட்டுபாட்டில் எடுத்து கொள்ள வேண்டும். இதில், கோயில் கட்டுவதற்கான 3 மாதங்களில் அறக்கட்டளையை மத்திய அரசு  அமைக்க வேண்டும். அதே நேரம், இஸ்லாமிய அமைப்புகள் மசூதி கட்டுவதற்காக அயோத்திலேயே முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும். அந்த இடத்தில் இஸ்லாமிய அமைப்புகள், மசூதி கட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி இஸ்லாமிய அமைப்பான வக்பு  வாரியத்தின் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம், என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் சட்டத்தின்படி தீர்ப்பளிக்காமல், நம்பிக்கையின் படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர். நீதி கிடைக்கும் நம்பியிருந்த தங்களுக்கு, இந்த தீர்ப்பானது பெருத்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவும், எனவே சட்டத்திற்கு புறம்பான தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தற்கிடையில், இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: