விளைநிலங்களில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக 13 மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம்

ஈரோடு : விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். உயர்மின் கோபுரங்களுக்கு மாற்றாக சாலை ஓரமாக புதைவழி மின் கம்பிகளை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் அதிகமான விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ததால் பரபரப்பு நிலவியது. சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி உள்ளிட்ட இடங்களில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் சாலை மறியல் நடத்தப்பட்டது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்தனர். இதே போல் தருமபுரி, காங்கேயம், மேட்டூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் சாலையோரமாக புதைவழி மின் தடம் அமைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி

இந்நிலையில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். ஈரோட்டில் உயர்மின் கோபுரம் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்த அவர், இதைத் தெரிவித்தார். தமிழகத்தில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது எனவும் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். கேரள மாநிலங்களில் அதிக இடங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் தங்கமணி, விவசாயிகளுக்கு அவர்கள் கேட்டதற்கு இணங்க நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: