×

ஆதார் அதிக பயனுள்ளது: வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகம்...பில் கேட்ஸ் அறிக்கை

டெல்லி: வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகமாக இருப்பதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகப் பெரும் பணக்காரரும், மைக்ரோசாஃப்ட் நிறுவன இணை நிறுவனருமான  பில் கேட்ஸ் தனது  வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய அளவில் வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு தொடர்பான நற்பணிகளுக்கு நன்கொடையாக அளித்து வருகிறார். பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், உலகநாடுகளில் போலியோவை  ஒழிக்க கடந்த ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உலக சுகாதார மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களும்  வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சில மாநிலங்களில் சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஈடுபாடு காட்டி வருகிறது. மேலும், இந்தியாவின் மிகவும்  பின்தங்கிய பகுதிகளில் கல்வி, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு வளர்ச்சியடையும் நோக்கத்தில் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் பல திட்டங்களையும் பில் கேட்ஸ் செயல்படுத்தி வருகிறார்.  இந்நிலையில், நேற்று இந்தியா வந்த பில் கேட்ஸ் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரை பாட்னா நகரில் சந்தித்து பேசினார். வறுமை ஒழிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள், சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக கடந்த 20  ஆண்டுகளாக பீகார் அரசு ஆற்றிவரும் பணிகளுக்காக பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் வறுமையையும் நோய்களையும் ஒழிக்கும் பணியில் சில இடங்கள் மட்டுமே பீகாரைப்போல் திறம்பட செயலாற்றி உள்ளது. பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒரு பெண்ணைவிட, அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையால் நோய், நொடிக்கு பலியாகாமல் தனது ஐந்தாம் பிறந்தநாளை கொண்டாடும் வாய்ப்பு தற்போது இருமடங்கு அதிகமாகி உள்ளது என இந்த  சந்திப்பின்போது பில் கேட்ஸ் தெரிவித்ததாக அவரது அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைவது பற்றி கூறயியலாது என தெரிவித்த பில் கேட்ஸ் அடுத்த 10 ஆண்டுகளில் வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகமாக  இருப்பதாக தெரிவித்தார். இது வறுமையில் உள்ளவர்களை மீட்டு எடுக்க உதவும் என்றும் கல்லி, சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு இந்தியா அரசு அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும்,  ஆதார் அட்டை அதிக பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார். நிதி சேவைகள் மற்றும் மருந்து துறையின் செயல்பாடுகள் பாராட்டும் விதமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த தசாப்தத்தில் இந்திய சுகாதார அமைப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பிட்ட நோய் திட்டங்கள் உள்ளன மற்றும் தடுப்பூசி பாதுகாப்பு கணிசமாக மேம்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு தான் இந்தியாவில் போலியோவின் கடைசி வழக்கு இருந்தது.



Tags : Adar ,India , India has greater potential for faster economic growth ... Bill Gates Report
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...