கஜா புயல் கடந்து ஓராண்டாகியும் உருக்குலைந்த பறவைகள் சரணாலயம் பொலிவு பெறுமா?

*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இருந்த பறவைகள் சரணாலயம் இன்று கஜா புயலுக்கு பிறகு புதர்கள் மண்டி பராமரிப்பின்றி உருக்குலைந்து கிடக்கிறது. சீரமைக்கப்படுமா..? என இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எதிபார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இயற்கை பறவை சரணாலயங்கள் பல உள்ளன. இதில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் 10க்கும் மேற்பட்ட சரணாலயங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் தொடங்கி சென்னை அருகே பழவேற்காடு மற்றும் வேடச்தாங்கல், மதுராந்தகம் அருகே கரிக்கிலி, அரியலூர் அருகே காரைவெட்டி, ராமநாதபுரம் அருகே சித்திரங்குடி, மேல்கீழ் செல்வனூர், கஞ்சிரங்குளம், திருநெல்வேலி அருகே கூந்தன்குளம், ஈரோடு அருகே வௌ;ளோடு, சிவகங்கை அருகே வேட்டங்குடி, நாகை அருகே கோடியக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பறவை சரணாலயங்கள் முக்கியமானதாகும்.

இவற்றோடு திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, உலகிலேயே அரிதான அலையாத்திகாடுகளும் பறவைகள் வந்துசெல்லும் பிரதேசமாக பயனிலிருந்தது. இதில் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பறவைகள் சரணாலயம். சுமார் 111 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாசன ஏரியில் உள்ளடக்கிய நிலையில் உள்ள இந்த சரணாலயத்தை வனத்துறை பராமதித்து வருகிறது. வருடத்தில் நவம்பர் துவங்கி பிப்ரவரி வரையிலும் இங்கு பறவைகள் வரத்து அதிகமிருக்கும்.

 மற்ற நாட்களிலும் உள்நாட்டு பறவையினங்கள் ஏரியில் கொட்டமடிக்கும். சாம்பல் நாரை, வெண் கொக்குகள், மயில்கால்கோழி, வௌ்ளை அரிவாள் மூக்கன், மடையான், பாம்புதாரா, சிறுதலைவாத்து, நாமக்கோழி, பவளக்கால் உல்லான், நாராயணபட்சி, கருமூக்கி, வெண்கொக்கு, மயில்கள் உள்ளிட்ட பல்வேறு நூற்றுகணக்கான பறவையினங்கள் சரணாலய ஏரியில் காணபடுகின்றன. தற்போது சுற்றிலும் ஆக்கிரமிப்பு முறையான பராமரிப்பு இல்லாததால் இன்று ஏரியில் நீர்வரத்து குறைந்ததால் குறைந்த அளவிலேயே பறவையினங்கள் தென்படுகின்றன.

இந்நிலையில் சென்றாண்டு கடலிலிருந்து கரைக்கு திரும்பிய கஜா புயல் வழியில் சோலைவனமாக பசுமை கண்டிருந்த ஆசியாவின் மிகப்பெரிய காடன முத்துப்பேட்டை அலையாத்திகாடுகளையும் கோரதாண்டவம் ஆடி துவம்சம் செய்து, முத்துப்பேட்டையையும் நாசம் செய்தது. இதில் இங்கு தமிழக சரணாலயங்களில் அரிதாக காணப்படும் கூழைக்கடா பறவை, துடுப்புவாயன், செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, சாம்பல் நாரை, வௌ;ளை அரிவாள் மூக்கன், சிறுதலை வாத்து, சிறவிகள், கொக்குகள், பவளக்கால் உல்லலான், மீன்கொத்திகள், நீர்க்கோழிகள் என பல்வேறு பறவையினங்களும் அலையாத்தி காடுகளுக்கு வலசை வந்து திரும்பின.

கனடா, ரஷ்யா, வடஅமெரிக்கா, சைபீரியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகைதரும் பறவையினங்கள், சீசன் காலம் வரையிலும் காட்டிலே தங்கி குடும்பம் நடத்தி, குஞ்சுகளுடன் தாயகம் திரும்புவது வாடிக்கை. இங்கு வரும் பறவைகள் பலவும் உதயமார்த்தாண்டபுரம் சரணாலய பகுதிக்கும் வந்து தங்கி திரும்புவதுண்டு. இதில் இந்த சரணாலயத்தில் உள்ள ஏரிக்கரையோர மரங்கள், ஏரி நடுவே நடப்பட்டுள்ள பலவகை பழமரங்களை தங்குமிடமாக பயன்படுத்தி கூடுகட்டி கொட்டமடித்த பறவைகள், கஜா புயலில் சிக்கி ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன.

அதேபோல் அலையாத்திகாடுகளிலும் தங்கியிருந்த லட்சக்கணக்கான பறவைகள் தற்போதில்லை. கஜாவால் அனைத்தும் காலியாகி விட்டன. இந்நிலையில் கஜா புயலடித்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், இந்த சரணாலயம் ஏரியை சுற்றி பராமரிக்கப்பட்டு வந்த மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்து கிடக்கின்றன. சீரமைப்பு பணிகளை ஓராண்டை கடந்தும் செய்யாததால் செடி கொடிகள் என புதர்கள் மண்டி கிடக்கிறது. உள்ளே சென்று பாதிப்புகளை கண்டு திரும்ப வழியின்றி பலவகை மரங்கள் நாலாபுறமும் சிதறி கிடக்கின்றன. இப்பகுதியிலிருந்த பெருமரங்கள் பலவும் கரை சீரமைப்பு எனும்பேரில் சென்றாண்டு ஜூன் மாதத்தில் வெட்டி அகற்றப்பட்டன. ஏரியின் நடுவேயிருந்த குளங்களில் பறவைகளுக்கு பிடித்தமான இரை மீன்களும் பிடிக்கப்பட்டன.

இதனால் தங்குமிடம், உணவு பறிபோனதால் ஏமாற்றமடைந்த கணிசமாக பறவைகள், ஏரியை புறந்தள்ளி இடம் மாறிச்சென்றன. இதனால் இயற்கை சரணாலயம் உருமாறி விடுமோ..? என பறவை ஆர்வலர்களும் கவலை தெரிவித்திருந்தனர். ஆனாலும் சென்றாண்டு புயலுக்கு முன்பு உதயமார்த்தாண்டபுரம் ஏரி ரூ 1.5கோடி திட்ட மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஏரியின் நீரை வழங்கும் வாய்க்கால் 11 கிலோ மீட்டர் தூர்வாரப்பட இருந்தது. தடுப்பு சுவர்களும் கட்டப்பட இருந்தன.

ஏரியின் கரையை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்த்தி கட்டவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு நீர்ஆதாரம் வரும் 2 மதகுகள் புதுப்பிக்கப்பட்டு ஏரி சீரமைப்பு க்கு பிறகு ஆயிரத்து 20 ஏக்கர் விவசாய நிலம் நீர் ஆதாரம் பெற முடியும் எனவும் மாவட்ட நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு பணிகளும் நடந்து வந்தது அதற்கிடையில் பேரிடராக வந்த கஜா புயல் உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்தை உண்டு இல்லை என்றாக்கி, உருக்குலைத்து விட்டது. இதனால் அந்த புனரமைப்பு திட்டம் கிடைப்பில் போடப்பட்டு தற்பொழுது அந்த நிதி என்னா ஆனது? என்று தெரியவில்லை. ஒருகால் அந்த நிதி செலவிடப்பட்டு விட்டது இதில் கஜா புயலில் அவைகள் சேதமாகிவிட்டன என்று ஒப்பந்தம் எடுத்தவர் கூற வாய்ப்புகள் உள்ளது.

அதேநேரத்தில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, பார்வையாளர்களை அனுமதிக்காமல் வனத்துறையினர் பூட்டி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கஜா புயலடித்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், இந்த சரணாலயம் ஏரியை சுற்றி பராமரிக்கப்பட்டு வந்த மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்து கிடக்கின்றன. சீரமைப்பு பணிகளை ஓராண்டை கடந்தும் செய்யாததால் செடி கொடிகள் என புதர்கள் மண்டி கிடக்கிறது உள்ளே சென்று பாதிப்புகளை கண்டு திரும்ப வழியின்றி பலவகை மரங்கள் நாலாபுறமும் சிதறி கிடக்கின்றன.

இதனால் மண்டிக்கிடக்கும் புதர்கள் சுத்தம் செய்யப்படவில்லை கரைத் தலங்கள் சேதமாகி உள்ளன நடந்து சென்று சுற்றுலா பயணிகள் ரசித்து வந்த நடைப்பாதை இன்று இல்லாதளவில் உள்ளது. மண்டி கிடக்கும் செடி கொடிகளால் பாம்புகள் விசஜந்துகள் அதிகளவில் உள்ளது. இதனால் உள்ளே செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லத்தளவில் உள்ளது. அதேபோல் பறவைகள் சரணாலயம் பராமரிப்பு இல்லாமல் கிடப்பதால் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இதனை ஒட்டி கொட்டப்படுகிறது.

இதனைகண்டு கோழி கடை, இறைச்சி கடைகாரர்கள் தங்களது கழிவுகளை இங்கு வந்து கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் மிகப்பெரியளவில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஏரிக்கு செல்லும் வாய்காலில் விழுந்த மரங்கள் கிடப்பதால் இதில் வந்த தண்ணீர் தேங்கி கழிவுநீராக மாறி கிடக்கிறது. இதில் ஆறுதலுக்கு வனத்துறை முகப்பு பகுதியை வர்ணம் பூசி அழகு படுத்தி வைத்துள்ளது. ஆனால் உள்ளே சென்று பார்த்தல் பார்பவர்களின் கண்களில் கண்ணீர் வரும் அளவில் அலங்கோலமாக உள்ளது.

மொத்தத்தில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் இன்று கஜா புயலுக்கு பிறகு புதர்கள் மண்டி பராமரிப்பின்றி உருக்குலைந்து கிடக்கிறது. எனவே உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தை புனரமைப்பு செய்ய மத்திய மாநில அரசுகள் இனைந்து சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறியபோது: கஜா புயலுக்கு பிறகு 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை மதிப்பில் சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பார்வையாளர்களை உள்ளிட்ட வரை புதுப்பிப்பதற்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை உரிய அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கையே விரிவுபடுத்திய உடன் நிதி ஒதுக்கீடு பெற்று புனரமைக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: