ஆயுள் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரம் : சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

மதுரை : மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில்

ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் என உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலவளவு கொலை வழக்கு கைதிகள் விடுவிப்பு

பட்டியலினத்தவரைச் சேர்ந்த மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்பட 7 பேர் 1997ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகிய 13 பேர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

இவர்கள் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர், ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். அதில், 13 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் அரசாணையின் நகல் தனக்கு வழங்க வேண்டுமென கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தண்டனையை, தமிழக அரசு எளிதாக கையாண்டு 13 பேரை விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய நீதிபதிகள், எதன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என கேள்வி எழுப்பினர்.

மேலும் மனித உயிர் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இவ்வளவு வேகமாக அவர்களை விடுதலை செய்ய அவர்கள் சமூகத்திற்கு அவ்வளவு முக்கியமானவர்களா என்றும் இதனால் சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் கூறினர்.

இதே போன்றுதான் தர்மபுரியில் மாணவிகள் 3 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 13 பேர் விடுவிக்கப்பட்டதற்கான கடந்த 8ம் தேதி தமிழக உள்துறை வெளியிட்ட அரசாணை மற்றும் அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாளை நேரில் ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: