காவிரி கரையோரங்களில் விளைச்சல் அமோகம் கோரை புல் அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள்

*பாய் தயாரிப்பு 30 சதவீதம் அதிகரிப்பு

சேலம் : காவிரி கரையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நாமக்கல், கரூரில் கோரை புல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கோரையை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

கோரை என்பது ஒரு வகை புல்லாகும். தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, தென் பெண்ணையாறு, அமராவதி, பவானி ஆறு, வைகை ஆற்றங்கரையில் கோரை புல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கோரை புல் விளைச்சலுக்கு அதிக தண்ணீர் தேவை இல்லை.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை கோரை புல் அறுவடை செய்யலாம். தற்போது காவிரி, தாமிரபரணி, பவானி ஆறு, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதால், கோரை புல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக கோரை புல் அறுவடை தீவிரமடைந்துள்ளது. இந்த வகையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், மோகனூர் பகுதியில் காவிரி கரையோர பகுதிகளில் கோரை புல் அறுவடை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. அறுவடை செய்த கோரை புல்லை விவசாயிகள், கட்டாக கட்டி பாய் தயாரிக்க அனுப்பி வருகின்றனர்.

இது குறித்து பரமத்திவேலூரை சேர்ந்த கோரை புல் விவசாயிகள் கூறியதாவது:  தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி ஆற்றாங்கரையோரம், பல ஏக்கரில் கோரை புல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு ஆண்டுக்கு இரண்டு முறை கோரை அறுவடை செய்யப்படுகிறது. இவ்வாறு அறுவடை செய்யப்படும் கோரை கட்டாக கட்டி பாய் தயாரிக்கும் இடங்களுக்கு அனுப்பி வருகிறோம். கரூர், ஓமலூர், மேச்சேரி, முசிறி, திருநெல்வேலி, பத்தமடை, கயத்தாறு, வேலூர், வாணியம்பாடி, பொன்னேரி, திருவண்ணாமலை, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் பாய் தொழில் நடந்து வருகிறது. தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாய் தயாரிக்கும் கூடம் உள்ளது. கைத்தறி மூலம் பாய்கள் நெய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இயந்திரங்கள் மூலம் பாய் நெய்யப்படுகிறது.

இத்தொழிலில் மறைமுகமாகவும், நேரிடையாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். கோரைகளை பிரிப்பது, அதற்கு சாயம் பூசுவது, வெயிலில் உலர்த்துவது, நெய்வது, பாய் நெய்த பிறகு அதன் ஓரங்களில் துணி வைத்து தைப்பது, பாய்களை சுருட்டி கட்டாக கட்டுவது போன்ற பல்வேறு கட்டங்களில் பணிகளை செய்து வருகின்றனர். பாயில் பல வகைகள் உள்ளன. கான்கிரீட் தளம் அமைக்க பயன்படும் பாய், வீடுகளில் படுக்க பயன்படும் பாய், திரைச்சீலை, நாற்காலிகள் என பல வகைகளில் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டாக பிளாஸ்டிக் பாய்கள் விற்பனைக்கு வருகின்றன. பிளாஸ்டிக் பாய்களை விட கோரைப்பாய் தான் உடலுக்கு நல்லது. கோரைப்பாய் உடல்சூடு குறைக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பள்ளிகளில் குழந்தைகள் அமர பயன்படுகின்றன.  

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பாய்கள் கோவை, சேலம், சென்னை, திருச்சி, மதுரை உள்பட பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர பாய் மொத்த வியாபாரிகள் வாங்கி கொல்கத்தா, பெங்களூரு போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது கோரை புல் அறுவடை அதிகரித்துள்ளதால் பாய்களின் தயாரிப்பும் கூடியுள்ளது. ஒரு பாய் ₹100 முதல் ₹700 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாய் தயாரிப்பாளர்களிடம் வாங்கிச்செல்லும் சில்லரை வியாபாரிகள் சற்று லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். இன்னும் இரண்டு மாதத்திற்கு கோரை புல் விளைச்சல் அமோகமாக இருக்கும். அதன் காரணமாக பாய்களின் தயாரிப்பும் வழக்கத்தைவிட 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Related Stories: