தொடரும் கடல் அரிப்பால் மெகா ஆபத்து குந்துகால் கடற்கரை சாலை குப்புறக் கவிழ்த்திடும் ஆளை

ராமேஸ்வரம் : பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் தொடரும் கடல் அரிப்பினால் கடற்கரைச்சாலை சேதமடைந்து வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகேயுள்ள பாம்பன் குந்துகால் கடற்கரையில் சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று விட்டு வந்து இறங்கியதன் நினைவாக நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இதனை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பேருந்து மற்றும் சுற்றுலா வாகனங்களில் வந்து செல்கின்றனர். குந்துகால் பகுதியில் வாழும் மீனவர்களும் இப்பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

 பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அக்காள்மடம் வழியாக குந்துகால் கடற்கரை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை செல்லும் தார்ச்சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சாலையில் இருந்து கடலில் படகுகள் நிறுத்தும் பகுதி வரை கடற்கரைக்கு இணைப்புச் சாலையும் உள்ளது. இச்சாலை வழியாக மீன் ஏற்றும் வாகனங்கள் சென்று மீனவர்களால் பிடித்து வரப்படும் மீன்களை ஏற்றிக்கொண்டு திரும்புகின்றன. கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்தின் காரணமாக குந்துகால் கடலோர பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து கடலரிப்பு ஏற்படுவதால் கடற்கரை செல்லும் சாலை உடைந்து சேதமடைந்து வருகிறது.

கடலரிப்பு தொடர்ந்தால், தார்ச்சாலை மேலும் சேதமடைந்து மொத்தமும் கடலுக்குள் சென்றுவிடும் நிலை உள்ளது. இச்சாலை முற்றிலும் சேதமடைந்தால் மீன் ஏற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் மீனவர்கள் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சுற்றுலாப்பயணிகளில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதனால் தேவையான இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தி கடலரிப்பினால் தார்ச்சாலை சேதமடைவதை தடுத்து கடற்கரை சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: