இந்தியாவில் கொலை நடக்க முக்கிய காரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியீடு: காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம்!

புதுடெல்லி: இந்தியாவில் கொலைக்கான காரணங்களில் முறையற்ற உறவுகள் உள்ளிட்ட காதல் விவகாரங்கள் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடந்த கொலைகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்த விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், தனிநபர் பழிவாங்குதல் போன்ற காரணங்களுக்காக நடந்த கொலைகளின் எண்ணிக்கை 67,774 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சொத்து பிரச்சனைக்காக 51,554 கொலைகள் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கொலைக்கான காரணங்களில் காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம் பிடித்துள்ளன. முறையற்ற உறவு, ஒருதலை காதல் போன்ற பிரச்சனைகளால் 44,412 கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.

மேலும், 2016ல் 71 ஆணவ கொலைகள் நடந்துள்ள நிலையில், 2017ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மொத்தமாக 36,202 கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், 2017ம் ஆண்டில் 28,653 கொலை நடைபெற்றுள்ளன. இது 21% குறைவாகும். இவ்வாறு ஒப்பிடுகையில், தனிநபர் கொலைகள் 4.3 சதவீதமும், சொத்து பிரச்சனைக்கான கொலைகள் 12 சதவீதமும் குறைந்துள்ளது. ஆனால், காதல் விவகாரம் தொடர்பான கொலைகள் இந்த காலகட்டத்தில் 28% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரம் தொடர்பான கொலைகள் ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகமாக நடைபெறுகிறது. இவ்விகாரம் தொடர்பான கொலைகளில் டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இரண்டாம் இடத்தில் உள்ளன. இந்நிலையில், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் காதல் தொடர்பான கொலைகள் மிகவும் குறைவாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: