×

9 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு : போடிமெட்டு சாலையில் கனமழையால் மண்சரிவு

போடி : போடிமெட்டு மலைச்சாலையில் பெய்த கனமழையால் நேற்று அதிகாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 9 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி  மாவட்டத்தில் போடிமெட்டு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை  பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு போடிமெட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் கனமழை  பெய்தது. இதனால் தமிழக, கேரளாவை இணைக்கும் போடிமெட்டு மலைச்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று  அதிகாலை 1 மணியளவில் போடிமெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருவி அருகில்  11வது கொண்டை ஊசி வளைவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

சரிந்து விழுந்த மண்  அப்பகுதியில் உள்ள சாலையை முழுவதும் மூடி மறைத்தது. இதனால் போடி - போடிமெட்டு  சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து மூணாறு உள்ளிட்ட கேரள பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்த அனைத்து வாகனங்களும் போடி முந்தல்  சோதனைச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோல் மூணாறு உள்ளிட்ட  பகுதிகளிலிருந்து வந்த அனைத்து வாகனங்களும் போடிமெட்டு சோதனைச் சாவடியில்  நிறுத்தப்பட்டன. காலை 9.30 மணிக்கு மேல் மலைச்சாலையில் கிடந்த  மண்ணை ஜேசிபி மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இதன்பின்  அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. மண்சரிவால் போடிமெட்டு  மலைச்சாலையில் 9 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வருசநாடு அருகே மண்சரிவு

இதேபோல், வருசநாடு அருகே வாலிப்பாறை செல்லும் மெயின் சாலையில் உருட்டிமேடு மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு இந்த சாலையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டதோடு, மரங்களும் சாலையில் விழுந்தன. இதனால் இரண்டு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறை மற்றும் மலைக்கிராம மக்கள் வந்து மரங்களை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து தொடங்கியது.

Tags : Bodimettu , bodi,Heavy Rain,Landslide ,traffic Jam
× RELATED மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு...