250-வது கூட்டத்தொடரை எட்டிய மாநிலங்களவை: இதுவரை 3817 மசோதாக்கள் நிறைவேற்றம்; 60 மசோதாக்கள் காலாவதி

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இதை முன்னிட்டு, அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்றும், நேற்று முன்தினமும்  கூட்டப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம்  பிர்லா நேற்று முன்தினம் கூட்டிய கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவையும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவையும் தொடங்கியது.

இந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், வரிகள் சட்ட திருத்த மசோதா, பல மாநிலங்களில் இயங்கும் கூட்டுறவு சொசைட்டிகள் ஒழுங்கு மசோதா, கம்பெனி  சட்ட இரண்டாவது சட்ட திருத்த மசோதா, குடிமக்கள் சட்ட திருத்த மசோதா, தனி தகவல்கள் பாதுகாப்பு மசோதா, விமானங்கள் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 27 மசோதக்களை தாக்கல் செய்து ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  

 இதற்கிடையே, நாட்டின் உயரிய சபையாக கருதப்படும் மாநிலங்களவைவின் முதல் கூட்டம் 1952-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதுவரை 249 கூட்டத்தொடர்களை நிறைவு செய்த மாநிலங்களவை, இன்று 250-வது கூட்டத்தொடரை  எட்டியது. இதனை முன்னிட்டு, மாநிலங்களவை குறித்த புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 249 கூட்டத் தொடர்களை நிறைவு செய்துள்ள மாநிலங்களவையில் இதுவரை 3817 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும் 60 மசோதாக்கள் பல்வேறு காரணங்களால் மக்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதியாகின.

1952-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது முதல் இதுவரை 3,818 சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு  வரப்பட்டுள்ளன. மொத்தம் 118 பக்கங்களை கொண்ட இந்த நினைவு மலரில் ராஜ்யசபாவின் வரலாறு, சமூக மாற்றம், பொருளாதார மாற்றம், தொழில்துறை வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பாதுகாப்பு  ஆகியவற்றில் ராஜ்யசபாவின் பங்கு, அவையில் நிறைவேற்றபட்ட முக்கிய சட்டங்கள், ராஜ்யசபா செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன. மாநிலங்களவையின் 250 வது கூட்டத்தொடரை கொண்டாட இன்று பிற்பகல் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: