சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு : 3 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன்

சென்னை : சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் ப்ரெஹ்மே ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு

சென்னை ஐஐடியில் கேரள மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் (18) என்ற மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கினார். கடந்த வாரம்  இவர் விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியின் செல்போன் நோட்ஸ் பகுதியில் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதி வைத்திருந்தது தெரிந்தது.

3 பேராசிரியர்களே காரணம்

ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என அதில் இருந்தது. மேலும்  ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் ப்ரெஹ்மே ஆகிய பேராசிரியர்களின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.அவர்கள் மதரீதியாக தவறாக பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முழு விசாரணை நடத்த கோரியும் கேரள முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழக முதல்வரும் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

3 பேராசிரியர்களுக்கு சம்மன்

மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சில பேராசியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐ.ஐ.டி வளாகத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாத்திமா மரண விசாரணை பெரும் பரபரப்பை எட்டி உள்ளது.

Related Stories: