×

குப்பைத் தொட்டி இல்லாத நாடு!

நன்றி குங்குமம் முத்தாரம்

ஜப்பானுக்குள் நுழையும் மற்ற நாட்டவர்கள் வியக் கும் முதல் விசயம் அதன் தூய்மை தான். உழைப்பு, சுறுசுறுப்பு, டெக்னாலஜியைத் தாண்டி ஜப்பானியர்களிடமிருந்து ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ‘நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி?’ என்பதைத்தான். ஜப்பான் எப்படி இவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்ப தற்கான பின்னணியைப் பார்ப்போம். ஜப்பானின் தலைநகர்டோக்கியோவில் உள்ள ஒரு பள்ளி. வகுப்பு முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது. ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் சில வேலைகளைச் சொல்கிறார். ‘‘நாளைக்கான பட்டியல் இதோ... முதல் மற்றும் இரண்டாம் பெஞ்சில் இருப்பவர்கள் வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மற்றும் நான்காம் பெஞ்சில் இருப்பவர்கள் பள்ளியின் தாழ்வாரம் மற்றும் மாடிப்படிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். ஐந்தாம் பெஞ்ச்சில் இருப்பவர்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஆறாம் பெஞ்ச்சில் இருப்பவர்கள் பள்ளியைச் சுற்றியிருக்கும் இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.’’ என்பதே ஆசிரியர் மாணவர்களுக்குச் சொன்ன வேலை.  

மாணவர்களும் ஆசிரியர் சொன்னதற்கு மகிழ்ச்சியாக தலையாட்டுகின்றனர். இந்த வேலையை ஜப்பானில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் விருப்பத்துடன் செய்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியின் வகுப்பறைக்குள்ளேயே ஒரு ரேக் இருக்கும். அதில் சுத்தம் செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  பள்ளியை மட்டுமல்ல, தெருக்கள், சாலைகள் என தங்களுக்குப் பக்கத்தில் உள்ள இடங்களைக் கூட குழுவாக இணைந்து தூய்மை செய்கின்றனர் ஜப்பானிய குழந்தைகள். தான் இருக்குமிடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண் ணம் ஜப்பானியர்கள் குழந்தையாக இருக்கும்போதே கற்பிக்கப்படுகிறது. பள்ளியில் பயின்ற அந்தப் பாடத்தை அவர்கள்  எந்த  வயதிலும்  மறப்பதில்லை. அதனால் தான் ஜப்பானிய தெருக்களில் ஒரு குப்பையைக் கூட பார்க்க முடிவதில்லை. குப்பை இருந்தால் தானே குப்பைத்தொட்டி வேண்டும். அதனால் தெருக்களில் குப்பைத்தொட்டியும் இருக்காது. துப்புரவுத் தொழிலாளியும் இருக்க மாட்டார்.


Tags : Japan, trash, non-existent, country
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...