சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நகர்ப்புற நக்சல்கள் செல்கின்றனர்: மத்திய அமைச்சர் முரளிதரன் பேட்டி

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி  நடையை திறந்தார். அதன் பிறகு புதிய மேல்சாந்தி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து கார்த்திகை 1ம் தேதியான நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் புதிய  மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோயில் நடை திறந்தார்.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று சரண கோஷம் எழுப்பினர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் தரிசனம்  செய்வதற்காக கூடுதல் நேரம் நடை திறக்கப்பட்டு உள்ளது. அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். அதிகாலை 3.20 முதல் காலை 11.30 வரை  நெய்யபிஷேகம் நடக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை இளம் பெண்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் சட்ட ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இளம் பெண்கள் சபரிமலை செல்வதை தடுக்க தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் தேவசம்போர்டை சேர்ந்த ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  இவர்கள் இளம்பெண்கள் சபரிமலைக்கு வருகிறார்களா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். இளம் பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் முரளிதரன், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நகர்ப்புற நக்சல்களும் குழப்பவாதிகளும் செல்வதாக தெரிவித்தார். நாத்திகர்கள் என்றே எனக்கு  தெரிகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும். அவர்கள் விரும்புகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் பக்தர்கள் தான் என்பதை ஆராய வேண்டும் என்றார். கேரள அரசே பெண்களை ஐயப்பன்  கோவிலுக்கு அழைத்து செல்லதாகவும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Stories: