சர்ச்சை பெண் எம்எல்ஏ அதிதி சிங்குக்கு திருமணம்: பஞ்சாப் காங். எம்எல்ஏ.வை மணக்கிறார்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருப்பவர் அதிதி சிங், இவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் தானும், தனது குடும்பத்தினரும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதால் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் `இறுதியில் ராகுலுக்கு பெண் கிடைத்து விட்டார்’ என்று கமென்ட் கொடுத்தனர். இதனால் எரிச்சலடைந்த அதிதி, `ராகுல் எனக்கு அண்ணன் போன்றவர். அதனால்தான் ராக்கி கயிறு கட்டினேன்’ என்று பதில் அளித்திருந்தார். அதிதியின் தந்தை அகிலேஷ் குமார் சிங்கும் ரேபரேலி தொகுதியின் எம்எல்ஏ.வாக 5 முறை பதவியில் இருந்துள்ளார். இந்நிலையில், அதிதிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சாகித் பகத்சிங் நகர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ. அங்கத் சிங்கை இவர் மணக்க உள்ளார். அதிதி சிங்கை  விட அங்கத் சிங் 3 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரும், அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது தந்தை பிரதாப் சிங்கும், தாய் குரிக்பால் கவுரும் நவன்சாகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ.வாக இருந்தவர்கள். இவரது தாத்தா தில்பாக் சிங், நவன்சாகர் தொகுதியில் 6 முறை எம்எல்ஏ.வாக இருந்துள்ளார். இவர்களின் திருமணம் இந்து மத முறைப்படி டெல்லியிலும், சீக்கிய மத முறையில் நவன்சாகரில் உள்ள ஆனந்த் கரஜ்ஜில் நவம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உபி.யில் நடந்த சிறப்பு பேரவைக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்த நிலையில், அதிதி சிங் மட்டுமே அதில் பங்கேற்றார். இதற்கு அவரிடம் விளக்கம் காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது.

Related Stories: