15 தொகுதி இடைத்தேர்தலில் சீட் கிடைக்காததால் பாஜ அதிருப்தியாளர்கள் திடீர் போர்க்கொடி: சமாதான முயற்சியில் முதல்வர் எடியூரப்பா தீவிரம்

பெங்களூரு: கர்நாடகாவில் டிச.5ம் தேதி நடக்கவுள்ள 15 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத பாஜ அதிருப்தியாளர்கள்ல கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் கவிழ்ந்தது. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்டு தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜ, சுயேச்சை எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கர்நாடகாவில் மொத்தவுள்ள 224 இடங்களில் சட்டசபையில் தற்போதைய பலம் 207 ஆக உள்ளது. 15 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜ பெரும்பான்மையை பெறும் நிலையில் உள்ளது. எனவே பாஜவினர் வெற்றி வியூகம் அமைத்து இடைத்தேர்தலை சந்திக்க களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் பாஜ ஆட்சி அமைய உதவி செய்த தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 15 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் 14 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் பாஜ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் வாய்ப்பை இழந்த பாஜவினர் போட்டி வேட்பாளர்களாக சுயேச்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர். ஒசக்கோட்டை தொகுதியில் பாஜவை சேர்ந்த பச்சேகவுடா எம்பியின் மகன் சரத் பச்சேகவுடா சுயேச்சையாக வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார். அந்த தொகுதியில் தீவிர பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

இவருக்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். இவ்வாறு 14 தொகுதிகளிலும் பாஜ அதிருப்தியாளர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த முதல்வர் எடியூரப்பா, தனது வீட்டில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவுடன் ஆலோசனை நடத்தினார். சில தொகுதியில் உள்ள அதிருப்தியாளர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடியூரப்பாவே பேசினார். பின்னர், யஸ்வந்தபுரம், கே.ஆர்.புரம் தொகுதிகளின் பாஜ வேட்பாளர்கள் சோமசேகர், பைரதி பசவராஜ், தகுதி நீக்க எம்எல்ஏ முனிரத்தனா ஆகிய 3 பேரும் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து அவர்களது தொகுதிகளில் உள்ள பாஜ அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் படி கேட்டுக்கொண்டதாக தெரியவருகிறது.

இதை தொடர்ந்து கே.ஆர்.புரம் தொகுதிக்கு மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, துணை முதல்வர் அஸ்வத்நாராயணா, அமைச்சர் அசோக் ஆகியோரை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்தார். இவர்கள் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் சீட் கிடைக்காததால் பாஜவில் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: