×

இந்தோ-பசிபிக் விஷயங்கள் பற்றி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சு: ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி: தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் டி எஸ்பரை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து இந்தோ-பசிபிக் விஷயங்கள் குறித்து பேசினார். ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் (ஏடிஎம்எம்-பிளஸ்) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்தது. இதில், ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், ஆசியான் நாடுகளின் கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, மனிதநேய உதவிகள் மற்றும் அமைதிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு இடையே அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் டி எஸ்பரை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தோ-பசிபிக் பகுதியில் சீனா ராணுவத்தின் செயல்பாடு, இருநாட்டு பொருளாதார நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவது பற்றி இருவரும் பேசினர். ‘இந்தோ-பசிபிக் பகுதியில் மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லைகளை மதிக்க வேண்டும், சர்வதேச விதிமுறைகள்படி அங்கு தடையில்லா போக்குவரத்து அமைய வேண்டும் என்பதுதான் இந்தியாவின் தொலைநோக்கு பார்வை. இதையே ஆசியான் அமைப்பில் இடம் பெற்றுள்ள 10 நாடுகளும் விரும்புகின்றன,’ என மார்க் டி எஸ்பரிடம், ராஜ்நாத் சிங் கூறினார்.

இதன்பின் ராஜ்நாத் சிங் டிவிட்டரில் விடுத்த செய்தியில், ‘அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சருடான சந்திப்பு சிறப்பாக இருந்தது. இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது பற்றியும் நாங்கள் பேசினோம்,’ என குறிப்பிட்டார். ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தரோ கோனோவையும், ராஜ்நாத் சிங் தனியாக சந்தித்து இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags : Indo-Pacific, Things, Rajnath Singh, Info
× RELATED 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...