காஷ்மீரின் லடாக் பகுதிக்கு பனியில் உறையாத டீசல்: சப்ளையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

புதுடெல்லி: காஷ்மீரின் லடாக் பகுதிக்கு பனியில் உறையாத டீசல் சப்ளையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி காட்சி மூலம்  நேற்று தொடங்கி வைத்தார். காஷ்மீரின் லடாக், கார்கில், கசா மற்றும் கேலாங் ஆகிய பகுதிகளில் குளிர் காலத்தில் மைனஸ் 30 டிகிரி வரை குளிர்  நிலவும். இதனால் வாகனங்களில் உள்ள டீசல் உறைந்து, அவற்றை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக காஷ்மீரின் லடாக் பகுதி வாகன  ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் குளிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் சிறப்பு டீசலை இந்திய  எண்ணெய் நிறுவனம் (ஐஓசிஎல்) அறிமுகம் செய்தது.

பிஎஸ்-6 கிரேடு தரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த சிறப்பு டீசல் அரியானா பானிபட்டில் உள்ள ஐஓசிஎல் சுத்திகரிப்பு மையத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த  டீசல் மைனஸ் 33 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவினாலும், அதன் திரவநிலை மாறாது. இந்த டீசல் சப்ளையை, மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா டெல்லியிலிருந்து காணொளி காட்சி மூலம் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமித்ஷா பேசுகையில், ‘‘இந்த  சிறப்பு டீசல், குளிர்காலத்தில் போக்குவரத்தை மட்டும் எளிதாக்காது, சுற்றுலாவையும் ஊக்குவிக்கும். லடாக் மக்களின் தற்போதைய தேவை இதுதான்.  இது லடாக்கின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்,’’ என்றார்.

Related Stories: