×

சையது முஷ்டாக் அலி டிராபி 113 ரன் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தியது தமிழகம்

திருவனந்தபுரம்: சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 113 ரன் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தி  அசத்தியது. கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற விதர்பா முதலில் பந்துவீசியது. தமிழகம் 20 ஓவரில்  8 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 5, முரளி விஜய் 7 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் தினேஷ் கார்த்திக்  அதிகபட்சமாக 58 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அபராஜித் 33, விஜய் ஷங்கர் 26, ஷாருக் கான் 19 ரன் எடுத்தனர். முருகன்  அஷ்வின் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விதர்பா பந்துவீச்சில் யாஷ் தாகூர் 3, தர்ஷன் நல்கண்டே, அக்‌ஷய் கர்னிவார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 169 ரன் எடுத்தால்  வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் விதர்பா களமிறங்கியது. தமிழக வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய  அந்த அணி 14.5 ஓவரில் 55 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. துஷார் கில் 16, வஸ்தவா 14, அக்‌ஷய் வாத்கர் 13 ரன் எடுக்க, மற்ற  வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்).

தமிழக பந்துவீச்சில் சாய் கிஷோர், விஜய் ஷங்கர் தலா 3, நடராஜன், சுந்தர், முகமது தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 113 ரன் வித்தியாசத்தில்  வென்ற தமிழகம் 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. பி பிரிவில் அனைத்து அணிகளும் தலா 6 லீக் ஆட்டத்தில் விளையாடியுள்ள நிலையில், தமிழக  அணி 20 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளதுடன் (5 வெற்றி, 1 தோல்வி) சூப்பர் லீக் சுற்றுக்கும் தகுதி பெற்றது. ராஜஸ்தான், விதர்பா, கேரளா  தலா 16 புள்ளிகள் பெற்று அடுத்த இடங்களில் உள்ளன. உத்தரப்பிரதேசம் (12), திரிபுரா (4), மணிப்பூர் (0) அணிகள் பின்தங்கியுள்ளன.


Tags : Syed Mushtaq Ali Trophy, Beat Vidarbha , 113 runs
× RELATED வாடிக்கையாளர்களை பார்த்து...