×

ராட்சத குழாய் உடைந்ததால் சி.டி.எச் சாலையில் வழிந்தோடும் குடிநீர்

திருமுல்லைவாயல்: சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு புழல் ஏரியின் தண்ணீர் சூரப்பட்டு, கீழ்ப்பாக்கம் ஆகிய நிலையங்களில் சுத்திகரிப்பு செய்து குடிநீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சூரப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஆவடி டேங்க் பேக்டரி, ஆவடி மாநகராட்சி மற்றும் ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகியவற்றுக்கு தண்ணீர் எடுத்து செல்ல அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை, சி.டி.எச் சாலை வழியாக பூமிக்கடியில் பைப்லைன் புதைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலையில், காவல் நிலையம் எதிரே பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால், தண்ணீர் வெளியேறி ஆறாக சாலையில் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சென்றனர். பாதசாரிகள் சாலையில் நடமாட முடியாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். ஆனால், அவர்கள் 2 மணி நேரம் ஆகியும் குடிநீரை நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணானது.  இதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு, சம்பவ இடத்திற்கு மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் விரைந்து வந்து பைப்லைன் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புழல் பகுதியில் இருந்து ஆவடி கொண்டு செல்லும் பைப்லைன் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் புதைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் செல்லும்போது அழுத்தம் காரணமாக அடிக்கடி பைப்லைனில் உடைப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, அம்பத்தூர் பகுதியான சண்முகபுரம், புதூர், ராம்நகர் மற்றும் திருமுல்லைவாயல், ஆவடி உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி பைப்லைன் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனித்து சேதமடைந்த குழாய்களை மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.


Tags : Giant pipe, broken, cdh road, drinking water
× RELATED திருவண்டார்கோவில்- கொத்தபுரிநத்தம் சாலையை சீரமைக்க கோரிக்கை