பெரம்பூர் முக்கிய சாலைகளில் பார்க்கிங் வசதி இல்லாத வணிக நிறுவனங்கள்

* சாலையை ஆக்கிரமிப்பதால் கடும் நெரிசல் * கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

பெரம்பூர்: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அதற்கேற்ப சாலை வசதி இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் முறையான பராமரிப்பின்றி சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால், நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆக்கிரமிப்புகள் தான் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னையில் முக்கிய வழித்தடங்கள் உள்பட அனைத்து சாலைகளிலும் வணிக வளாகங்கள், கடைகள், மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. ஆனால், இவற்றில் பார்க்கிங் வசதி இருப்பது இல்லை. இதனால், மேற்கண்ட கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால், பல சாலைகள் ஒற்றையடி பாதையாக குறுகி தினசரி கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரசலில் சிக்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு வழக்கமாக அரை மணி நேரம் ஆகும் என்றால், இந்த நெரிசல் காரணமாக 2 மணி நேரம் வரை பயணிக்க வேண்டிய நிலை இன்று உள்ளது.

இவ்வாறு தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை முக்கிய பங்கு வகிக்கிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக வட சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் மக்கள் பெரம்பூர் ரயில் நிலையம் வந்து ரயில் மூலம் பயணிக்கின்றனர். இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே தொடர்ச்சியாக பிரபலமான ஓட்டல்கள் பல உள்ளன. இந்த ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லாததால், அங்கு வரும் வாடிக்கையாளர்கள்

தங்களது பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.

இதனால் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதுஒருபுறம் இருக்க அந்த பகுதியில் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களும் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் நெரிசல் மேலும் அதிகரித்து மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். பெரம்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் இதே நிலைதான் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி 6வது மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளும் அவ்வப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். ஆனால், அடுத்த சில நாட்களில் எப்போதும் போல் ஆக்கிரிப்பு தொடரும். இதை கண்டுகொள்ளாமல் இருக்க சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாதம்தோறும் செல்ல வேண்டிய தொகை, தவறாமல் சென்றுவிடுவதுதான், என்று கூறப்படுகிறது. போலீசாரும் இந்த ஆக்கிரிமப்புகளை கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றனர். காரணம் தினசரி காலை டிபன், மதியம் சாப்பாடு, மாலை டிபன் மற்றும் பார்சல் போன்றவை இந்த ஓட்டல்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, அப்பகுதியில் உள்ள  ஓட்டல்களில் பார்க்கிங் வசதி செய்ய உத்தரவிட வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நெரிசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே

அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மீண்டும் முளைத்த விளம்பர பலகைகள்

பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை சமீபத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது, நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளின் விளம்பர பலகை, முகப்பு கூரை உள்ளிட்டவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனால், நெரிசல் குறையும் என மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அடுத்த 10 நாட்களில் மீண்டும் புத்தம் புதிதாக ஓட்டல்களுக்கு விளம்பர பலகைகள் மற்றும் போர்டுகள் அதே இடத்தில் வைக்கப்பட்டது. தினசரி ஏற்படும் நெரிசலில் சிக்கி மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் அவதிப்பட்டாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மட்டும் நடவடிக்கை எடுப்பதில்லை.

கண்துடைப்பு நடவடிக்கை

சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால், அங்கு வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே அனைத்து வணிக நிறுவனங்களிலும் முறையான பார்க்கிங் வசதி செய்ய வேண்டும்.  சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற பலமுறை உத்தரவிட்டுள்ளது. அதுபோன்ற நேரங்களில், மறுநாளே மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் படைசூழ சென்று குறிப்பிட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள். ஆனால், அடுத்த ஒரு சில நாட்களில் அந்த இடத்தில் மீண்டும் அதே ஆக்கிரமிப்புக்கள் இருப்பதை கண்கூடாக காண முடியும். எனவே, இதற்கு நிரந்த தீர்வு காண ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: