6 கொலை வழக்கில் தொடர்புடையவர் ஆந்திராவில் பதுங்கி இருந்த கூலிப்படை தலைவன் கைது: கூட்டாளியும் பிடிபட்டார்

சென்னை: வட சென்னையில் 6 கொலை வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ் (எ) ஆற்காடு சுரேஷ் (38). இவர் மீது  பொன்னேரியில் ரவுடி சின்னா மற்றும் வழக்கறிஞர்  பகவத்சிங் கொலை வழக்கு, புளியந்தோப்பு ரவுடி ராதாகிருஷ்ணன், கொலை உள்ளிட்ட  6 கொலை வழக்குகள் உள்ளன.

இவை தவிர ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூலிப்படை தலைவனாகவும்  செயல்பட்டு வந்தார். தலைமறைவாக இருந்த ஆற்காடு சுரேஷை கடந்த 6 மாதங்களுக்கு முன் புளியந்தோப்பு போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சமீபத்தில், ஜாமீனில் வெளியே வந்த சுரேஷ், தலைமறைவாக இருந்தபடி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அவரை புளியந்தோப்பு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சுரேஷ் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி புளியந்தப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான  தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம் காலஹஸ்தி அருகே அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரது கூட்டாளி ராஜேஷையும் பிடித்தனர். பின்னர், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: