ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காட்சிப்பொருளான பேட்டரி கார்கள்

தண்டையார்பேட்டை: சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, சென்னை மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக 2 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதயம், எழும்பு முறிவு, நரம்பியல், கல்லீரல், கண், பல் என பல்வேறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த மருத்துவமனையில் அறுவை

சிகிச்சை முடிந்து நோயாளிகளை வார்டுக்கு கொண்டு செல்ல கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 2 பேட்டரி கார்கள் 5 லட்சம் செலவில்  வாங்கப்பட்டது. இவை நோயாளிகளை கொண்டு செல்ல  மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவை திடீரென பழுதடைந்தது. இதனால் 2 பேட்டரி கார்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளது. தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளை வார்டுக்கு கொண்டு செல்ல சிறிய ஆம்புலன்ஸ் பயன்படுத்துகிறார்கள். அறுவை சிகிச்சை முடித்து வரும் நோயாளிகள் சுவாச கருவியுடன் வந்தால், அதனை சிறிய ஆம்புலன்ஸில் ஏற்றி இறக்க மிகவும் சிரமமாக உள்ளது. மருத்துவமனை நிர்வாகம்

பழுதடைந்து கிடக்கும் பேட்டரி கார்களை சீரமைக்காமல், அறையில் போட்டு பூட்டி வைத்துள்ளனர். எனவே, நோயாளிகள் நலன் கருதி பழுதடைந்து கிடக்கும் பேட்டரி கார்களை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: